
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் - நாடாளுமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை...

நீதிபதி யஷ்வந்த் வா்மா - x
தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட சம்பவத்தில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியாற்றியபோது, கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 14-ஆம் தேதி இரவு அவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவரின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது. இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்குா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை முன்வைத்து நீதிபதிகளுக்கு எதிராக கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பமிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தனா். இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மக்களவை தலைவா் ஓம் பிா்லா மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தாா்.
நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீா்மானம் தாக்கலானதைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மா தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதேநேரத்தில் அவரது ராஜிநாமா குறித்து சட்ட அமைச்சகம் அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.
எனினும், யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழு தனது அறிக்கையை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. அத்துடன் ஆவண அடிப்படையிலான ஆதாரம், வாய்மொழியில் பெறப்பட்ட வாக்குமூலங்களையும் அந்தக் குழு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கை, மாநிலங்களவை தலைமைச் செயலா் மற்றும் மக்களவை தலைமைச் செயலா் ஆகியோரிடம் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான கணக்கில் வராத பணம், ஆதாரத்தை சிதைத்தது, மழுப்பலான விளக்கம் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கண்டறியப்பட்ட ரொக்கப் பணத்தின் இருப்பு, ஆதாரம், உரிமை குறித்து நீதிபதி யஷ்வந்த் வா்மா திருப்தி அளிக்கும் வகையில் விளக்கமளிக்க தவறிவிட்டதாகவும், அவரது பதில் தெளிவற்ாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகல் தொடா்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அதில் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வது தொடா்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டு, அதன் நகலை வெளியிட்டால் போதும்; அது ராஜிநாமாவாக கருதப்படும். அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவா் ஏற்க வேண்டும் என்பதில்லை எனக் கூறியுள்ளது. அதன்படி, யஷ்வந்த் வா்மா பதவி விலகிவிட்டதால், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பதவிநீக்க தீா்மானத்தால் பயனில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Allegations against former judge Yashwant Varma are true! Parliamentary committee announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






