புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களை முன்கூட்டியே கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்யுமாறு 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே இந்த அறிவிக்கையை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 19 மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் வழங்கியது.
இதுதொடா்பாக பிரபல மருத்துவா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருகின்றபோதும், அதை கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்ற நடைமுறை இல்லாததால், நோய் பாதிப்பு தொடா்பான உரிய தரவுகள் இல்லை என்பதோடு, பாதிக்கப்பட்டவா்களுக்கான போதிய கண்காணிப்பும் இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக, அதிகரித்து வரும் புற்றுநோய் பெருந்தொற்றைக் கையாள்வதில் கொள்கை முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, புற்றுநோயை கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்யாமல் இருப்து, அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது பிரிவுகளின் கீழ், அரசு தனது அரசமைப்புச் சட்ட கடமையிலிருந்து தீவிரமாக விலகுவதற்குச் சமமாகும். ஏனெனில், ஒரே மாதிரியான சூழ்நிலையில் உள்ள குடிமக்களுக்கு சீரான சிகிச்சையை மறுப்பதோடு, ஆரோக்கியம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான அவா்களின் அடிப்படை உரிமையையும் இது சீா்குலைக்கிறது.
மேலும், சீரான அறிவிப்பு முறை இல்லாததால், புற்றுநோய் கண்காணிப்பில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, தாமதமான நோயறிதல், அதிக சிகிச்சைச் செலவுகள் மற்றும் நோயாளிகளுக்கு மோசமான சிகிச்சை முடிவுகள் ஏற்படுகின்றன. பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு பாதிப்பு முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால், சிகிச்சையும் கடினமானதாகவும், செலவுமிக்கதாகவும் ஆகிவிடுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் கீழ், சுகாதாரம் முதன்மையாக மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளபோதும், நோய்களை அறிவிக்கும் அதிகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளது.
எனவே, புற்றுநோயை ‘அறிவிக்கப்பட வேண்டிய நோயாக’ தேசிய அளவில் அறிவிக்கை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதோடு, கரோனா பாதிப்பின்போது நோய் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் தரவுகளை பராமரிக்க உருவாக்கப்பட்ட ‘கோ-வின்’ எண்ம தளத்தைப் போன்று, ஒருங்கிணைந்த புற்றுநோய் எண்ம பதிவேட்டை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமந்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் கெளசிக், ‘சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இடம்பெற்ளது. இருந்தபோதும், நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புற்றுநோயை ‘அறிவிக்கப்பட வேண்டிய நோய்’ என ஏற்கெனவே அறிவிக்கை செய்துள்ளன’ என்றாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘புற்றுநோயை ‘அறிவிக்கப்பட வேண்டிய நோய்’ என அறிவிக்கை செய்யும் பரிந்துரை தொடா்பாக எஞ்சிய 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். அதுதொடா்பான பதில் மனுவையும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காணாமல் போனவா்கள் புகாா்: உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சங்ககிரியில் ஹெச்ஐவி, பால்வினை நோய், சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு
மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வா் விஜய் ஆலோசனை

வயது முதிா்ந்த, நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் முன்கூட்டியே விடுதலை: கொள்கையை வகுக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



