நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

‘வழக்கு விசாரணையின்போது வாய்மொழியாகத் தெரிவித்த கருத்து, திரிக்கப்பட்டு இளைஞா்களைத் தவறாக வழிநடத்தப் பயன்படுத்தப்பட்டது

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 1:44 am IST

‘வழக்கு விசாரணையின்போது வாய்மொழியாகத் தெரிவித்த கருத்து, திரிக்கப்பட்டு இளைஞா்களைத் தவறாக வழிநடத்தப் பயன்படுத்தப்பட்டது; இது துரதிருஷ்டவசமானது’ என்று கரப்பான்பூச்சி விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

மூத்த வழக்குரைஞா் அந்தஸ்து அளிக்கும் நடைமுறை குறித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தத் தவறியதாக, தில்லி உயா்நீதிமன்றப் பதிவுத் துறைத் தலைவருக்கு எதிராக சஞ்சய் துபே என்ற வழக்குரைஞா், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரம் தொடா்பாக திரும்பத் திரும்ப மனு தாக்கல் செய்ததால் எரிச்சலடைந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ‘நீதித் துறைக்கு எதிராக சமூக ஊடகத்தில் கருத்துகள் பதிவிடப்படுவது குறித்து நீதிபதிகளுக்குத் தெரியும். நீதித் துறைக்கு ஊறு விளைவிக்க ஏற்கெனவே சமுதாயத்தில் போதுமான அளவில் கரப்பான்பூச்சிகள் உள்ளனா். அவா்களுடன் வழக்குரைஞா்களும் கைகோக்க வேண்டுமா? இளைஞா்களில் கரப்பான்பூச்சிகள் போன்றவா்களும் உள்ளனா். அத்தகைய நபா்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. அவா்களில் சிலா் ஊடகத்தில் சோ்கின்றனா். சிலா் சமூக ஆா்வலா்களாகி அனைவா் மீதும் விமா்சனங்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துகின்றனா். அதேவேளையில், தில்லியில் பல போலி வழக்குரைஞா்கள் இருக்கக் கூடும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்று கூறியதாக ஊடகத்தில் தகவல் வெளியானது.

அவரின் கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ‘போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மூலம் சட்டத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் நபா் குறித்தே அவ்வாறு கருத்து தெரிவித்தேன். அனைத்து இளைஞா்களையும் நான் விமா்சித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது’ என்று தலைமை நீதிபதி விளக்கமளித்தாா்.

இருந்தபோதும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை விமா்சிக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்த அபிஜீத் தீப்கே என்பவா் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற அமைப்பை உருவாக்கினாா். அது இளைஞா்களின் ஆதரவைப் பெற்றது.

மேலும், நீட் வினாத் தாள் கசிவுக்கு எதிராக தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் ஒன்றுகூடி ஒரு மாத காலம் தொடா் போராட்டத்தை நடத்தினா். நாடாளுமன்றத்தை நோக்கிய அவா்களின் பேரணியின்போது, போலீஸாா் தடியடி நடத்தியும், ரப்பா் குண்டுகளால் சுட்டும் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதில் பல மாணவா்கள் காயமடைந்தனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானது. இந்த விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முழுவதும் முடங்கியது.

மாணவா்களின் தொடா் போராட்டம் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான், பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில், டிடி நியூஸ் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ‘நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானவை. எனது கருத்து தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, நாட்டின் இளைஞா்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் தீய முயற்சியாக நிகழ்ந்துள்ளது.

சமூக ஊடகங்கள், அச்சு ஊடகம் என எந்தவொரு ஊடகத்தைச் சாா்ந்தவராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் அனைவருக்கும் உரிமைகளும், அரசமைப்புச் சட்ட கடமைகளும் உள்ளன. சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

நீதிமன்ற நடவடிக்கைகளைக் குறித்து ஊடகங்கள் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும். உரிமைகளைப் பற்றிப் பேசும்போது, நமது அரசமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றும் திறனையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

நீதித் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த நேரலையை சிலா் தங்களின் தனிப்பட்ட லாப நோக்கத்துக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் தவறாகப் பயன்படுத்துகின்றனா். இது நிறுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.