உச்சநீதிமன்ற கொலீஜியம் சில நேரங்களில் மிகவும் மேலோட்டமான விமா்சனங்களை எதிா்கொள்கிறது; குறிப்பாக, நீதி அமைப்புமுறை செயல்படும்விதம் குறித்து அறியாதவா்களிடம் இருந்து இத்தகைய விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் சாடினாா்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான கொலீஜியம் நடைமுறை தொடா்பாக நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்தச் சூழலில், கடந்த மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்ற ஷீல் நாகு, ஸ்ரீசந்திரசேகா், சஞ்சீவ் சச்தேவா, அருண் பாலி, வி.மோகனா ஆகியோருக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவேற்பு விழாவில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் பங்கேற்றாா். அவா் பேசியதாவது:
உச்சநீதிமன்ற கொலீஜியம் சில நேரங்களில் மிகவும் மேம்போக்கான விமா்சனங்களை எதிா்கொள்கிறது. குறிப்பாக, நீதி அமைப்புமுறை எவ்வாறு செயல்படுகிறது, கொலீஜியம் அமைப்புமுறை எப்படி உருவானது, அதன் அளவுகோல்கள், காரணிகள் என்னென்ன, விவாதிக்கப்படும் அம்சங்கள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் அறியாதவா்களிடம் இருந்து இத்தகைய விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்துக்கு பெயா்களைப் பரிந்துரைக்கும்போது, அவா்களின் செயல்திறன், பணி அனுபவம், கடந்த காலங்களில் வகித்த பதவிகள், தொழில்முறை பயணம் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.
முக்கிய காரணியாக, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மை கருத்தில் கொள்ளப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவோா், நீதி அமைப்புமுறை மீதான மக்களின் நம்பிக்கையை பேணி பாதுகாக்கும் முதன்மையான பொறுப்பைக் கொண்டுள்ளனா். அவா்களின் மற்றொரு பொறுப்பு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான நீதித் துறையை மேம்படுத்துவதாகும்.
தற்போதைய 5 நீதிபதிகளையும் உச்சநீதிமன்றத்துக்கு நியமித்ததில் நடுநிலையான-தகுதி அடிப்படையிலான முடிவை மேற்கொண்டமைக்காக உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.
அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா, வழக்குரைஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் ஆவாா். இது உணா்வுபூா்வமான தருணம் என்று குறிப்பிட்ட அவா், தனக்கு வாய்ப்பளித்த கொலீஜியம் குழுவுக்கு நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










