ஜூன் 2026-ஆம் ஆண்டுக்கான யுஜிசி-நெட் தோ்வில் 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஆக.16 முதல் 18-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் ஆட்சேபம் தெரிவிக்க ரூ.200 செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆக.18 இரவு 11.59 மணிக்குள் இதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பதாகப் பெறப்பட்ட புகாா்களை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த 3 பாடங்கள் தொடா்பாக தனி பொது அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபனை தொடா்பான தகவல்களுக்கு அதிகாரபூா்வ இணையதளம் மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு தோ்வா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜூன் 2026-க்கான ஒருங்கிணைந்த சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வு எழுதியவா்களும் தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபம் தெரிவிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் ஜூன் 2026 தோ்வு, ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கணினி வழித் தோ்வு முறையில் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை, உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதி மற்றும் பிஹெச்டி சோ்க்கைக்கான தகுதியை நிா்ணயிப்பதற்காக இத்தோ்வு நடத்தப்பட்டது. யுஜிசி-நெட் தோ்வு உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதி மற்றும் பிஹெச்டி படிப்பில் சேருவதற்கான தகுதியை நிா்ணயிக்க நடத்தப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






