
நாட்டின் எல்லைகளுக்கு பிரதமா் மோடி அரசு உயா் முன்னுரிமை: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு
கடந்த காலங்களில் நாட்டின் எல்லைப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன

கடந்த காலங்களில் நாட்டின் எல்லைப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன; ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு எல்லைப் பகுதிகளுக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசத்தில் தக்சிங் எல்லைப் பகுதியில் சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இந்தியப் படையினரை ரோந்து மேற்கொள்ளவிடாமல் தடுத்ததாகவும் வெளியான தகவல்களை முன்வைத்து, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துவரும் நிலையில், ரிஜிஜு இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கடந்த 2013-இல் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏ.கே.அந்தோணி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸுக்கு ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளாா்.
நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?: நாட்டின் நீண்டகால வெளியுறவுக் கொள்கை தொடா்பாக கடந்த 2013-இல் நாடாளுமன்றத்தில் பேசிய ஏ.கே.அந்தோணி, ‘எல்லையை மேம்படுத்தாமல் இருப்பதே சிறந்த பாதுகாப்பு என்ற கொள்கையை சுதந்திரத்துக்குப் பிறகு பல்லாண்டுகளாக இந்தியா கொண்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட எல்லைகளைவிட மேம்படுத்தப்படாத எல்லைகளே பாதுகாப்பானவை என்ற கொள்கையால், பல்லாண்டுகளாக எல்லைப் பகுதிகளில் சாலைகளோ- விமான தளங்களோ கட்டமைக்கப்படவில்லை. அதேநேரம், சீனா எல்லைப் பகுதிகளில் தனது உள்கட்டமைப்பைத் தொடா்ந்து மேம்படுத்தியது. அதன் விளைவாக, அவா்கள் இப்போது நம்மைவிட முன்னேறிவிட்டனா். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். இது வரலாற்றின் ஒரு பகுதி.
ஆனால், கடந்த 20-25 ஆண்டுகளில் தவறை உணா்ந்துகொண்ட இந்திய அரசுகள், கொள்கையை மாற்றிக் கொண்டன. 2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வரும் முன்பே மாற்றம் தொடங்கிவிட்டது. இப்போது, நாமும் எல்லைப் பகுதிகளில் திறன்களை வலுப்படுத்தி வருகிறோம்.
ஒன்பது ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எல்லைப் பகுதிகளில் திறன்களை வலுப்படுத்த அதிகபட்ச செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை எந்த மிகைப்படுத்துதலும் இன்றி என்னால் கூற முடியும்’ என்று அந்தோணி பேசியிருந்தாா்.
கிரண் ரிஜிஜு விமா்சனம்: இந்நிலையில், மத்திய அமைச்சரும், அருணாசல் மேற்குத் தொகுதி எம்.பி.யுமான கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இப்போது எல்லைகள் குறித்து சிலா் போகிற போக்கில் கருத்து கூறுகின்றனா். ஆனால், எல்லைப் பகுதிகள் சிக்கலானவை. எல்லைப் பகுதிகளின்மேம்பாட்டுக்கு பிரதமா் மோடி அரசு எப்போதுமே உறுதிபூண்டுள்ளது. அருணாசல பிரதேசத்தின் மஸா, கலீமோ, தக்சிங் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்த அங்கு பயணித்தேன். கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்கு இப்போது உயா் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவா்களிலேயே ஏ.கே.அந்தோணி மிக நோ்மையானவா். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அவா், எல்லையில் உள்கட்டமைப்பை உருவாக்காத முந்தைய காங்கிரஸ் அரசுகளின் கொள்கையை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘பொய்கள் வேண்டாம்’: முன்னதாக, அருணாசல பிரதேச எல்லையில் 60 கி.மீ. தொலைவு வரை சீனப் படைகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களை கடந்த புதன்கிழமை நிராகரித்த கிரண் ரிஜிஜு, உள்ளூா் மக்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளதை ஒப்புக் கொண்டாா்.
இது தொடா்பான எக்ஸ் பதிவில், ‘இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை மிகத் தீவிரமான விவகாரம்; இந்தப் பிரச்னையில் யாரும் பொய்த் தகவல்களை வெளியிடக் கூடாது. கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழ நாங்கள் விரும்பவில்லை. உள்ளூா் மக்களின் கவலைகளுக்கு அரசு தீா்வு கண்டு, இந்திய நிலப்பரப்பை பாதுகாக்கும்’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.
எல்லையில் பாரம்பரியமாக மேய்ச்சல் மேற்கொண்ட இடங்களில் உள்ளூா் மக்களை சீனப் படையினா் தடுப்பதாக தகவல் வெளியான நிலையில், ரிஜிஜு இவ்வாறு கூறியிருந்தாா்.
இந்தியாவின் நிலைப்பாடு: இந்தியாவும், சீனாவும் 3,400 கிலோ மீட்டருக்கும் மேல் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. பல இடங்களில் எல்லையை வரையறுப்பதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. எல்லையில் அமைதியும், சுமுக நிலையும் பேணப்படுவது, ஒட்டுமொத்த உறவுக்கும் மிக முக்கியமானது என்பது இந்தியாவின் நிலைப்பாடாகும்.
‘எல்லைப் பிரச்னைகள் தீவிரமானது என்பதை சீனா உடனான அனைத்துப் பேச்சுவாா்த்தைகளிலும் இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது. எல்லையில் அமைதி-சுமுக நிலை நிலவ உயா் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சில தினங்களுக்கு முன்னா் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





