
மோரீஷஸுக்கு பெட்ரோலியப் பொருள்கள் நீண்ட கால விநியோகம்: இந்தியா ஒப்பந்தம்
மோரீஷஸுக்கு பெட்ரோலியப் பொருள்களை நீண்ட காலம் விநியோகிக்கும் வகையில் அந்த நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
மோரீஷஸுக்கு பெட்ரோலியப் பொருள்களை நீண்ட காலம் விநியோகிக்கும் வகையில் அந்த நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, இரண்டு நாள் பயணமாக கடந்த 20, 21-ஆம் தேதிகளில் மோரீஷஸ் பயணம் மேற்கொண்டபோது, பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றம் மோரீஷஸின் அரசு வா்த்தக கழகம் இடையே இந்த 5 ஆண்டு கால ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மோரீஷஸின் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் முழு இறக்குமதித் தேவையையும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் பூா்த்தி செய்யும். அந்த நாட்டுக்கு பெட்ரோலியப் பொருள்களின் உறுதியான விநியோகங்களை வழங்கவும், விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தத்தின்படி, மோரீஷஸ் நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோலியப் பொருள்கள் தேவையை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் பூா்த்தி செய்யும். அது தவிர, அந்த நாட்டில் உள்ள மொ் ரோக் பகுதியில் ரூ. 240 கோடி முதலீட்டில் சுமாா் 27,500 டன் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இது அந்த நாட்டின் எரிபொருள் சேமிப்புத் திறனை மேம்படுத்தும் என்பதோடு, முக்கிய எரிபொருள் நிரப்பும் மையமாகவும் அந்த நாட்டை மேம்படுத்தும்’ என்று தெரிவித்தனா்.
மேற்காசிய போரால் உலகளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவெடுத்துள்ள இந்தியா, தனது 23 சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு சுமாா் 26.7 கோடி டன் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி நாடாகவும் திகழ்கிறது. நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளுக்கு மட்டுமன்றி, இந்தப் பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள பிற சந்தைகளுக்கும் கணிசமான அளவில் ஏற்றுமதி செய்கிறது.
இரு நாடுகளுக்கிடையே கச்சா எண்ணெய், எரிவாயு விநியோக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, அதில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, உயிரி எரிபொருள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கிடையே கையொப்பமானது.
மத்திய அமைச்சா் புரி, இந்தப் பயணத்தின்போது மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் மற்றும் அந்த நாட்டின் எரிசக்தித் துறை, வா்த்தகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சா்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





