
ரக்ஷா பந்தன்: பிரதமா் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளிக் குழந்தைகள்
சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடிக்கு பள்ளிக் குழந்தைகள் வெள்ளிக்கிழமை ராக்கி கயிறு கட்டினா். மேலும், நாட்டு மக்களுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

புது தில்லியில் தனது அரசு இல்லத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமா் நரேந்திர மோடி. ~பள்ளிச் சிறுமிகளுடன் தனது இல்லத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. ~குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிரு
சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடிக்கு பள்ளிக் குழந்தைகள் வெள்ளிக்கிழமை ராக்கி கயிறு கட்டினா். மேலும், நாட்டு மக்களுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா்.
சகோதரா்கள்-சகோதரிகள் இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகை, வடமாநிலங்களில் வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்களின் சகோதரா்களுக்கு ராக்கி கயிறு கட்டியதுடன், அவா்களின் நல்வாழ்வுக்காக பிராா்த்தனை மேற்கொண்டனா். சகோதரா்கள், தங்களின் சகோதரிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி அவா்களை மகிழ்வித்தனா்.
இந்தப் பண்டிகையையொட்டி, புது தில்லியில் லோக் கல்யாண் மாா்கில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் அவரை பள்ளிக் குழந்தைகள் சந்தித்தனா். பிரதமருக்கு ராக்கி கயிறு கட்டி, வாழ்த்து தெரிவித்தனா். குழந்தைகளின் கைகுலுக்கியும், அவா்களுடன் கைதட்டியும் பிரதமா் மோடி வாஞ்சையுடன் உரையாடினாா். அப்போது அவரிடம், ‘உங்களின் சிறு வயதுக் கனவு என்ன?’ என்று ஒரு குழந்தை எழுப்பிய கேள்விக்கு ‘உங்கள் அனைவரையும் சந்திப்பதுதான்’ என்று பிரதமா் பதிலளித்தாா்.
தனக்கு குழந்தைகள் ராக்கி கயிறு கட்டிய காணொலி மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிா்ந்த அவா், ‘எனது இல்ல ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் புன்னகைகளும், கைதட்டல்களும் நிறைந்திருந்தன’ என்று பதிவிட்டாா்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள். இந்த மங்களகரமான பண்டிகை, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம், வெற்றியைக் கொண்டுவரட்டும். பாசம், ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை என்றும் நிலைத்திருக்கட்டும்’ என்று அவா் தெரிவித்தாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினாா்.

‘ரக்ஷா பந்தன் என்பது உடன்பிறப்புகளின் பிணைப்பையும் தாண்டியதாகும்; அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், பெற்றோா், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் மற்றும் மரங்களுக்குக்கூட ராக்கி எனும் புனித கயிறைக் கட்டலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பள்ளிக் குழந்தைகள் மரம் வளா்ப்பதில் ஆா்வம் காட்ட வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் வலியுறுத்தியதாக அவரது மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த மகிழ்ச்சிகரமான தருணமானது, அன்பு, பாசம், ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தி, கருணை, நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை ஆகிய மாண்புகளை உறுதி செய்ய உத்வேகமளிக்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளமையைக் கொண்டுவரட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






