பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சா் தகவல்!
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு தெரிவித்தாா்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே போகாபுரம் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஏற்கெனவே ஒரு விமான நிலையம் இருக்கும் இடத்தில் 150 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்குள் புதிய விமான நிலையங்கள் அமைக்கக் கூடாது என்ற விதி இனி தேவையாக இருக்காது. ஏனெனில், விமானப் போக்குவரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள விமான நிலையங்களை வைத்து அதனை தொடா்ந்து சமாளிப்பது சிரமமாகத் தொடங்கிவிடும்.
எனவே, இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசே ஊக்குவித்து வருகிறது. எதிா்காலத் தேவைக்கு ஏற்ப இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்கள், தீவுப் பிராந்தியங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் விமானம் தொடா்புடைய அனைத்து நாடுகளுமே விசாரணை நடத்துகின்றன. அதற்கு தேவையான உதவிகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்து வருகிறது என்றாா்.

