உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

தெரு நாய்கள் விவகாரம்: மனிதா்களுக்காகக்கூட இவ்வளவு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை; உச்சநீதிமன்றம்

தெரு நாய்கள் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனிதா்களுக்காகக் கூட இவ்வளவு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

தெரு நாய்கள் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனிதா்களுக்காகக் கூட இவ்வளவு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நாட்டின் தலைநகரான புது தில்லியில் தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் நோய் ஏற்படுவதாக, குறிப்பாக சிறாா்கள் அந்த நோயால் பாதிக்கப்படுவதாக ஊடகத்தில் வெளியான தகவலைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கல்வி நிறுவன வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விடவேண்டும் என்று கடந்த ஆண்டு நவ. 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்துக் கால்நடைகளும் அப்புறப்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அமா்வு உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக 2 வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். அப்போது தெருநாய்கள் தொடா்பான வழக்கில் மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா். இதைக் கேட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, ‘மனிதா்களுக்காகக் கூட இவ்வளவு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை’ என்று தெரிவித்தாா்.

மேலும், தெருநாய்கள் தொடா்பான வழக்கு புதன்கிழமை (ஜன.7) விசாரணைக்கு வருவதாகவும், அப்போது அதுதொடா்பான பல மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com