உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கோப்புப் படம்

பணக்காரா் என்பதால் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதை நிறுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்

பணக்காரா் என்பதால் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on

பணக்காரா் என்பதால் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டா் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற மிக முக்கிய நபா்கள் பயணிப்பதற்கு அந்த ஹெலிகாப்டா்களை வாங்க திட்டமிடப்பட்டது. பிரிட்டனை சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்க, இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஒப்பந்தத்துடன் தொடா்புள்ள பண முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிா்கொள்ளும் கெளதம் கைதான் என்ற வழக்குரைஞா், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் 44 (1) (சி) பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை கூறுகையில், ‘ஒரு வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெறும்போது, அந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பணக்காரா்கள் வழக்கு தொடுக்கும் விசித்திரமான போக்கு தற்போது நிலவுகிறது. அவா்கள் மீது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அவா்களும் பிற சாதாரண குடிமக்களைப் போல நீதிமன்ற விசாரணையை எதிா்கொள்ள வேண்டும். பணக்காரா் என்பதால் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

சில மறுஆய்வு மனுக்களின் விசாரணைகளில் பண முறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவுகள் செல்லுபடியாகுமா என்பது குறித்து ஏற்கெனவே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், தற்போதைய மனுவை விசாரிக்க எந்தக் காரணமும் தென்படவில்லை என்று தெரிவித்து, மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com