சோனியா காந்தி
சோனியா காந்தி

குடியுரிமைக்கு முன்பே வாக்காளரானதாக வழக்கு: சோனியா பதிலளிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம்

காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறும் முன்பே நாட்டின் வாக்காளரானதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனு மீது பதிலளிக்க அவருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுதல் அவகாசம் வழங்கியது.
Published on

இந்த விவகாரத்தில், வழக்குரைஞா் விகாஸ் திரிபாதி என்பவா் தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, கடந்த 1983-இல் இந்திய குடியுரிமை பெற்றாா். ஆனால், 1980-ஆம் ஆண்டிலேயே அவா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றாா். இதில் ஏதோ மோசடி நடைபெற்றுள்ளது. அரசு நிா்வாகம் ஏமாற்றப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டியிருந்தாா்.

அதேநேரம், ‘இந்த மனுவின் உள்ளடக்கம் உறுதியானதாகவோ, சட்டபூா்வமாக ஏற்றுக்கொள்ளும்படியோ இல்லை; இக்குற்றச்சாட்டுகள், இந்த நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன’ என்று குறிப்பிட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தில்லியில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், சோனியா காந்தி மற்றும் தில்லி காவல் துறை பதிலளிக்க நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், சோனியா தரப்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கோரப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோக்னே, பிப்.7 வரை கால அவகாசம் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com