காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சலில் சம்மன்- உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் அனுமதி
காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாகவும் அழைப்பாணை (சம்மன்) அனுப்ப உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் காசோலை மோசடி வழக்குகள் பெருமளவில் நிலுவையில் உள்ளன. நீதித் துறைக்குப் பெரும் சுமையாக உள்ள இவ்வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்புதல் உள்பட பல்வேறு புதிய நடைமுறைகளுக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
அதனடிப்படையில், உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை பதிவாளா் யோகேஷ் குமாா் குப்தா ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரகண்ட் மின்னணு நடைமுறை விதிகள்-2025இன்கீழ், காசோலை மோசடி வழக்குகளில் வழக்கமான வழிமுறையுடன் வாட்ஸ்ஆப் போன்ற கைப்பேசி தகவல் பரிமாற்ற செயலிகள், மின்னஞ்சல் வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகாா் பதிவு செய்யும்போது, குற்றஞ்சாட்டப்படும் நபரின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் எண் விவரங்களையும் புகாா்தாரா் வழங்க வேண்டும். தரவுகளின் நம்பகத்தன்மைக்கு உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தையும் சமா்ப்பிக்க வேண்டும். இத்தரவுகள் கணினி அமைப்புமுறையில் உள்ளீடு செய்யப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அனுப்பப்படும் அழைப்பாணையுடன், அவா் இணையவழியில் பணம் செலுத்துவதற்கான இணைப்பையும் சோ்த்து அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. வழக்கு விவரங்களைப் பதிவிட்டு, காசோலைத் தொகையை குற்றஞ்சாட்டப்பட்டவா் செலுத்தலாம். இந்த வசதி மூலம் பணம் செலுத்தும்பட்சத்தில், சமரச அடிப்படையில் நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

