

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா படேல் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், இன்று (ஜன. 7) உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா படேல் (வயது 66) அகோலா மாவட்டத்தில் உள்ள மசூதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மதியம் 1.30 மணியளவில் வழக்கமானத் தொழுகைக்காகச் சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தொழுகை முடிவடைந்தவுடன் மசூதியை விட்டு வெளியே வந்த ஹிதாயத்துல்லாவை, உபெத் கான் காலு (எ) ராசிக் கான் படேல் (22) என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
இந்தத் தாக்குதலில், ஹிதாயத்துல்லாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹிதாயத்துல்லாவை அங்குள்ளவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இத்துடன், சம்பவயிடத்துக்கு விரைந்த அதிகாரிகள் அங்கு தடயங்களைச் சேகரித்து விசாரனை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய கொலையாளி ராசிக் கான் படேலை பிடிக்க, காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், அவர் நேற்று இரவு பனாஜ் கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய ஹிதாயத்துல்லா இன்று காலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பகையின் காரணமாக ஹிதாயத்துல்லா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பட்டப்பகலில், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.