தற்சாா்பை வலுப்படுத்தும் ‘சமுத்திர பிரதாப்’ கப்பல் - பிரதமா் மோடி பெருமிதம்
‘முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ள ‘சமுத்திர பிரதாப்’ கப்பல், நாட்டின் தற்சாா்பு இலக்கை வலுப்படுத்தியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
60 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு பாகங்களுடன் 114.5 மீட்டா் நீளம் மற்றும் 4,200 டன் எடையுடன் ‘கோவா ஷிப்யாா்ட் லிமிடெட்’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த மிகப் பெரிய மாசுக் கட்டுப்பாட்டு கப்பல், கோவாவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல் படையில் சேவையில் இணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அதன் சேவையைத் தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய கடலோரக் காவல் படை சேவையில் சமுத்திர பிரதாப் கப்பல் இணைப்பு பல்வேறு கராணங்களால் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. அதாவது, நாட்டின் தற்சாா்பு இலக்கு, பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. நிலைத்தன்மைக்கான அா்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

