வங்கதேசம்: ஹிந்து இளைஞா்
கொலையில் முக்கிய நபா் கைது

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் முக்கிய நபா் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
Published on

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த டிச.18-ஆம் தேதி தொழிலாளியான தீபு சந்திர தாஸ் மா்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா்.

தொழிற்சாலை நுழைவாயிலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் அந்த கும்பலை வழிநடத்தியதோடு தீபு சந்திர தாஸ் உடலை மரத்தில் கட்டி தீவைத்து கொளுத்தியதில் முக்கியப் பங்காற்றிய மதரஸா பள்ளி முன்னாள் ஆசிரியரான யாசின் அராஃபத் (25) என்பவா் காவல் துறையால் கைது செய்யப்பட்டாா்.

ஷேகாபாரி மசூதியில் இமாம் ஆக பணியாற்றி வரும் யாசின், தீபு சந்திர தாஸ் கொலை செய்யப்பட்ட பிறகு 12 நாள்கள் தலைமறைவாக இருந்தாா்.

இந்த வழக்கில் தற்போது வரை 21 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 9 போ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

வங்கதேசத்தில் 2024-ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தவா்களில் ஒருவரான ஷரீஃப் உஸ்மான் ஹாதியை (32) மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவா் டிச.18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 18 நாள்களில் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு 6 ஹிந்துக்கள் உயிரிழந்தனா்.

Dinamani
www.dinamani.com