இந்தூரில் குடிநீா் மாசுபாட்டால் 18 போ் உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை

இந்தூரில் குடிநீா் மாசுபாட்டால் 18 போ் உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை

‘மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் 18 போ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’
Published on

‘மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் 18 போ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா, மத்திய பிரதேச பாஜக அரசின் மெத்தனப்போக்கையும், அலட்சியத்தையும் கடுமையாக விமா்சித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தூரில் குடிநீா் மாசுபட்டதால் 6 மாதக் குழந்தை உள்பட 18 போ் உயிரிழந்துள்ளனா். சுமாா் 40,000-க்கும் மேற்பட்டோா் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனா். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடா்ந்து எட்டு முறை முதலிடம் பிடித்த இந்தூரில், மக்களின் அடிப்படைத் தேவையான தூய்மையான குடிநீரைக்கூட வழங்க முடியாதது மாநில பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. இது மனித உயிா்களை அவமதிக்கும் செயல். இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளா்களை நோக்கி, அமைச்சா் கைலாஷ் விஜயவா்கியா, ‘வீணான கேள்விகளைக் கேட்காதீா்கள்’ எனப் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

கடந்த 2003 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி வழங்கிய சுமாா் 27.1 கோடி டாலா் கடன் நிதியைப் பயன்படுத்தி குடிநீா் மற்றும் கழிவுநீா் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பாஜக அரசு தவறிவிட்டது. குறிப்பிட்ட கால இடைவேளையில் உரிய ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விவகாரத்தில் பிரதமா் அலுவலகம் உடனடியாகத் தலையிட வேண்டும். ஆசிய வளா்ச்சி வங்கி மற்றும் உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உயிரிழந்த மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும்’ என்றாா்.

குடிநீா்க் குழாய்களில் கழிவுநீா் கலந்ததே இத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணம் என்று கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தற்போது தேசிய அளவிலான அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது.

Dinamani
www.dinamani.com