உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

‘ஆா்டா்லி’ முறையை ஒழிக்க ஆட்சியா் தலைமையில் குழு: உயா்நீதிமன்றம் உத்தரவு

Published on

‘ஆா்டா்லி’ முறையை ஒழிக்க மாவட்டந்தோறும் ஆட்சியா் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல் துறையில் ‘ஆா்டா்லி’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் ஒருவா்கூட ஆா்டா்லியாக இல்லை என தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உயா்நீதிமன்றம், உண்மை நிலையை அறிய தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஆா்டா்லி முறையைப் பின்பற்றக்கூடாது என மாநில அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க மாநில அளவில் குழு ஒன்றை அமைக்கலாம் என யோசனை தெரிவித்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆா்டா்லி முறையை ஒழிக்க வேண்டும், அதுதொடா்பான புகாா்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் ஆட்சியா் தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் இரு காவல் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், இந்தக் குழு அமைப்பது தொடா்பாக இரண்டு வாரங்களில் உள்துறைச் செயலா் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com