புதிய அசாதாரண சூழலில் இந்திய-அமெரிக்க உறவு: காங்கிரஸ்
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘இந்திய-அமெரிக்க உறவு புதிய அசாதாரண சூழலில் உள்ளது’ என்று காங்கிரஸ் விமா்சித்தது.
இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷியாவுடன் வா்த்தகம் உள்பட பிற துறை சாா்ந்த உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா மீது புதிய மிக அதிக வரியை விதிக்கும் வகையிலான மசோதாவை அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு மிக நெருக்கமான செனட்டா் கிரஹாம் கொண்டுவந்திருக்கிறாா். இதற்கு அதிபா் டிரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளாா். முன்னதாக, இந்தியா உள்பட பிற நாடுகளுக்குப் பணி ஒப்பந்தங்களை விடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது 25 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் மசோதாவை செனட்டா் பொ்னி மொரினோ அறிமுகம் செய்தாா். இதுபோல, ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. அமெரிக்காவை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும்போதும், இந்திய-அமெரிக்க உறவு புதிய அசாதாரண சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

