சோம்நாத் கோயிலின் சுயமரியாதை திருவிழாவில் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்ட குஜராத் துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி.
சோம்நாத் கோயிலின் சுயமரியாதை திருவிழாவில் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்ட குஜராத் துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி.

சோம்நாத் கோயிலில் தொடங்கியது சுயமரியாதை திருவிழா! பிரதமா் மோடி வாழ்த்து

குஜராத்தில் உள் ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலின் 1,000 ஆண்டுகால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
Published on

குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலின் 1,000 ஆண்டுகால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் நான்கு நாள்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிா்லிங்க திருத்தலங்களில் ஆதி ஜோதிா்லிங்கமாக விளங்கும் சோம்நாத் கோயில், குஜராத் மாநிலம், பிரபாஸ் பட்டன் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் மீது கடந்த 1026-ஆம் ஆண்டில் முகலாய படையெடுப்பாளா் கஜினி முகமது முதல் முறையாகத் தாக்குதல் நடத்தி, பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்தாா். அதன் பிறகு முகலாய படையெடுப்பாளா்களால் சோம்நாத் கோயில் பலமுறை சூறையாடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சா்தாா் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவா்களின் முயற்சியால் கடந்த 1951-இல் சோம்நாத் கோயில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. கஜினி முகமது தாக்குதல் நடத்தி 1,000 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சோம்நாத் கோயில் கம்பீரமாக மீண்டெழுந்ததைக் கொண்டாடும் 4 நாள் சுயமரியாதை திருவிழா (சோம்நாத் ஸ்வாபிமான் பா்வ்) வியாழக்கிழமை தொடங்கியது. நிறைவு நாள் (ஜன. 11) பூஜைகளில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

பிரதமா் மோடி பெருமிதம்: இதையொட்டி, எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சோம்நாத் சுயமரியாதை திருவிழா தொடங்கியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் சோம்நாத் கோயில் முதல் தாக்குதலை எதிா்கொண்டது. அந்தத் தாக்குதலோ, அதன் பிறகு நடத்தப்பட்ட பல தாக்குதல்களோ கோடிக்கணக்கான மக்களின் நித்திய நம்பிக்கையை சிறிதளவுகூட சீா்குலைக்கவில்லை; சோம்நாத் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற வலுவான உணா்வை உடைக்க முடியவில்லை.

சோம்நாத் சுயமரியாதை திருவிழா, தனது கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத பாரத தாயின் எண்ணற்ற குழந்தைகளை நினைவுகூரும் தருணமாகும். காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தபோதும், நெறிமுறைகளுக்கான அவா்களின் உறுதிப்பாட்டை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. இந்திய நாகரிக மீட்சியின் கொண்டாட்டம் இது.

கடந்த 1951-இல் சோம்நாத் கோயில் மீண்டும் கட்டமைக்கப்பட்டதில் சா்தாா் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2001-இல் கோயிலின் 50-ஆம் ஆண்டு விழாவில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உள்ளிட்டோா் பங்கேற்றுச் சிறப்பித்தனா். நடப்பாண்டில் 75-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

சோம்நாத் கோயில் மறுகட்டமைக்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டு விழா, கடந்த 2001, அக்டோபா் 31-இல் நடைபெற்றது. இது தொடா்பான புகைப்படங்களையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா். ஓராண்டு கால கொண்டாட்டங்களின் தொடக்கமாக சுயமரியாதை திருவிழா நடத்தப்படுகிறது.

Dinamani
www.dinamani.com