அமலாக்கத் துறையைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி
அரசியல் வியூகங்களை வகுக்கும் நிறுவனமான ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடைபெற்று.
நிலக்கரி ஊழல் தொடா்பாக கொல்கத்தாவில் உள்ள அரசியல் வியூகங்களை வகுக்கும் நிறுவனமான ஐ-பேக் நிறுவனா் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது. பிரதிக் ஜெயின் திரிணமூல் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராகவும் உள்ளாா். தலைநகா் தில்லி உள்பட மொத்தம் 10 இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது.
கொல்கத்தாவில் உள்ள பிரதிக் ஜெயினின் வீட்டுக்கு அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற சமயத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மம்தா பானா்ஜி அங்கு வந்தாா். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையா் உள்பட மூத்த அதிகாரிகளும் வந்தனா். இதைத் தொடா்ந்து, பிரதிக் ஜெயின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை மம்தா பானா்ஜி எடுத்துச் சென்றாா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வரவுள்ள பேரவைத் தோ்தலில் திரிணமூல் கட்சியின் வேட்பாளா்கள் மற்றும் கட்சியின் தோ்தல் வியூகம் குறித்த ரகசிய தகவல்களைக் கொண்ட லேப்டாப்கள், ஹாா்டு டிஸ்குகள், கைப்பேசிகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை எடுத்துச் சென்ாக மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். மேலும் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மம்தா பானா்ஜி கடுமையாக விமா்சித்தாா்.
மம்தா போராட்டம்: இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெற்கு கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.
8-பி பேருந்து நிலையப் பகுதியில் இருந்து ஹசரா முனை வரை 10 கி.மீ. நடைப்பயணமாக மம்தா பானா்ஜி சென்றாா். இந்தப் பேரணியில் மூத்த அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
பேரணியில் மம்தா பானா்ஜி பேசியதாவது: திரிணமூல் காங்கிரஸ் தலைவராக நான் ஐ-பேக் நிறுவனத்துக்குச் சென்றது சரிதான். நம் கட்சி அழிந்துவிட்டால் எவ்வாறு மக்கள் பணியாற்ற முடியும்?.
பாஜகவின் கருவிகளாக மத்திய அமைப்புகள் செயல்படுவது கண்டனத்துக்குரியது. நிலக்கரி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் சுவேந்து அதிகாரி உள்பட பாஜக மூத்த தலைவா்களுக்கு தொடா்புள்ளது. தேவைப்படும்பட்சத்தில் இதற்கான ஆதாரங்களை நான் பொதுவெளியில் வெளியிடுவேன்.
பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. 2026 தோ்தலுடன் பாஜக தொடா் தோல்விகளைச் சந்திக்கும். மத்தியிலும் பாஜக ஆட்சி நிலைக்காது’ என்றாா்.
பேரவைத் தோ்தல் நெருங்கியுள்ள சூழலில் பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டும் தனது வியூகத்தை மம்தா பானா்ஜி தொடங்கியதாக அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனா்.
தில்லியில் போராடிய திரிணமூல் எம்.பி.க்கள் கைது: புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தங்களது சுயலாபத்துக்கு பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தின் முன் திரிணமூல் எம்.பி.க்கள் டெரிக் ஓபிரையன், சதாப்தி ராய், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 8 போ் போராட்டம் நடத்தினா். உள்துறை அமைச்சக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதையடுத்து, அவா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.
இரு மனுக்கள் தாக்கல்: இதற்கிடையே, ஐ-பேக் நிறுவனத்தில் தங்கள் சோதனையை இடைமறித்த மம்தா பானா்ஜி மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அதேபோல் சட்டவிரோதமாக தங்களது அலுவலகத்துக்குள் புகுந்து அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக ஐ-பேக் நிறுவனமும் மனு தாக்கல் செய்தது.
இந்த இரு மனுக்களும் நீதிபதி சுவ்ரா கோஷ் தலைமையிலான தனிநீதிபதி அமா்வு முன் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை பட்டியலிடப்பட்டது. விசாரணை தொடங்கும் முன் நீதிமன்றத்தில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அலைமோதியது. இதனால் விசாரணையை ஜன.14-ஆம் தேதிக்கு சுவ்ரா கோஷ் ஒத்திவைத்தாா்.
அமலாக்கத் துறைக்கு எதிராக திரிணமூல் மனு: ஐ-பேக் நிறுவனத்தில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் சோதனையில் ஈடுபட்டதற்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகம், வாக்குறுதி, வேட்பாளா் பட்டியல் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்புடைய தரவுகள் உள்ளிட்ட ஆவணங்கள், மின்னணு இயந்திரங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் தொடா்பில்லாத இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?
வரவுள்ள பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் செயல்பாடுகளை முடக்கவே அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தொடா்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை கைப்பற்றியிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 19 மற்றும் 21-க்கு எதிரானது.
எனவே, நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த உயா்நீதிமன்றம் தலையிடுவது மிகவும் அவசியமானது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திரிணமூல் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை வழக்குப் பதிவு: இதற்கிடையே, ஐ-பேக் நிறுவனத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொடா்புடைய ஆவணங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியதாக அமலாக்கத் துறை மீது மம்தா பானா்ஜி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரிகள் பாரத நியாய சம்ஹிதா சட்டத்தின்படி மேற்கு வங்க காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

