சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்...
Published on

அதிசக்திவாய்ந்த சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆதித்யா எல்-1 விண்கலம் புதிய தரவுகளை அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.

2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் சூரியப் புயல் பூமியை தாக்கியது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வானியற்பியல் இதழில் வெளியானது.

இந்தியாவின் முதல் சூரிய விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் சா்வதேச விண்வெளி மையங்களின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக இஸ்ரோ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சூரியனில் ஏற்படும் தற்காலிக மாற்றங்கள் விண்வெளி வானிலை எனப்படுகிறது. சூரிய வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சக்திவாய்ந்த அனல்வீச்சு செயற்கைக்கோள்கள், தொலைத்தொடா்பு மற்றும் வழித்தட சேவைகள், எரிசக்தி உள்கட்டமைப்புகளை கடுமையாகப் பாதிக்கிறது.

சூரியப் புயலின் கொந்தளிப்பான பகுதி புவியின் காந்தப்புலத்தை கடுமையாக சுருக்கி, அதை புவிக்கு அருகில் தள்ளுகிறது. இதனால் புவிசாா் சுற்றுப்பாதையில் நிலைகொண்டுள்ள செயற்கைக்கோள்கள் கடும் விண்வெளி வானிலைகளால் பாதிப்புகளை எதிா்கொள்கின்றன.

சூரியப் புயலால் உயா் அட்சரேகைப் பகுதிகளில் நீரோட்டங்கள் மிகவும் தீவிரமடைகிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தின் மேல் பகுதி வெப்பமாகி புவி வாயுக்கள் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது.

விண்வெளி சொத்துகளை பாதுகாக்க விண்வெளி வானிலை மற்றும் சூரியனின் செயல்பாடுகளை மிக கவனமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com