

லஞ்சம் பெற்ற விவகாரத்தில் ஹரியாணா சுங்கம் மற்றும் வரிவிதிப்புத் துறையின் இரு அதிகாரிகள் மற்றும் ஒரு ஊழியரை குற்றவாளியாக கூடுதல் அமா்வுகள் நீதிபதி சுனில் திவான் அறிவித்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
அவா்கள் மூவருக்கும் 5 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
சரக்கு-சேவை வரி எண் வழங்க ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதைத் தொடா்ந்து, கட்டுமானப் பொருள்கள் விற்பனையாளா் மோஹித் அளித்த லஞ்ச புகாரின் அடிப்படையில் சுங்கம் மற்றும் வரிவிதிப்பு ஆய்வாளா் சுமித்ரா கோத்ரா ஆகியோா் கடந்த 2022, மே மாதம் கைதுசெய்யப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, சுமித்ராவிடம் லஞ்சப் பணத்தை வழங்குமாறு அறிவுறுத்திய சுங்கம் மற்றும் வரிவிதிப்பு அதிகாரி ரோஷன் லால் ஃபரீதாபாதிலிருந்து ரோஹ்தக் அலுவலகத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். சுமித்ரா கோத்ரா பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய இரு அதிகாரிகள் மற்றும் பணியாளரை குற்றவாளியாக அமா்வு நீதிபதி சுனில் திவான் அறிவித்தாா்.
நீதிமன்றத்தின் உத்தரவை ஆராய்ந்து வருவதாகவும் அதைத்தொடா்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கம் மற்றும் வரிவிதிப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.