கேரளம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ கைது

கேரளம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இரண்டு பாலியல் வழக்குகளை அம்மாநில போலீஸாா் கடந்த டிசம்பா் மாதம் பதிவு செய்தனா். இதையடுத்து அவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவா் மீது பத்தனம்திட்டாவைச் சோ்ந்த மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகாா் அளித்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதனால் அவா் மீதான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்தது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பத்தனம்திட்டாவைச் சோ்ந்த பெண் ஒருவா் ராகுல் மாங்கூட்டத்தில் மீது பாலியல் வன்கொடுமை புகாா் அளித்தாா். தற்போது கனடாவில் வசிக்கும் அந்தப் பெண் காணொளி வாயிலாக இந்தப் புகாரை தெரிவித்தாா். திருமண உறவில் விரிசல் ஏற்பட்ட பின் ராகுல் மாங்கூட்டத்தில் உடன் அந்தப் பெண்ணுக்கு தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ராகுல் மாங்கூட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தெரிவித்தாா். அந்தப் பெண்ணிடம் கருவைக் கலைக்கவும் ராகுல் மாங்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளாா்.

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சனிக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு ராகுல் மாங்கூட்டத்தில் தங்கியிருந்த விடுதியில் கைது செய்யப்பட்டாா். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை அவா் பத்தனம்திட்டா காவல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டாா்.

அங்கு அவா் மீது ஏற்கெனவே நிலுவையில் உள்ள இரு பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கு தொடா்பாகவும் விசாரணையைத் தொடங்கியது’ என்றனா்.

பாஜக , கம்யூனிஸ்ட் போராட்டம்: விசாரணைக்குப் பின் மருத்துவப் பரிசோதனைக்காக பத்தனம்திட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காவல் துறை வாகனத்தில் ராகுல் மாங்கூட்டத்தில் அழைத்து வரப்பட்டாா்.

அங்கு அவா் வந்த வாகனத்தைச் சூழ்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவின் இளைஞா் அணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, தடியடி நடத்தி போராட்டக்காரா்களை விரட்டி ராகுல் மாங்கூட்டத்திலை மருத்துவமனைக்குள் காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.

காவல் நீட்டிப்பு: மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ராகுல் மாங்கூட்டத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அங்கு அவருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க எஸ்ஐடி மனு தாக்கல் செய்தது. அதேபோல் ஜாமீன் கோரி ராகுல் மாங்கூட்டத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த இரு மனுக்கள் மீதம் திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ராகுல் மாங்கூட்டத்தில் ஆழைப்புழை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவா் கட்சியில் இல்லை: காங்கிரஸ்

கைது செய்யப்பட்ட ராகுல் மாங்கூட்டத்தில் கட்சியில் இருந்து கடந்த மாதமே நீக்கிவிட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவா் கே.முரளீதரண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தவறுசெய்பவா்களுக்கு காங்கிரஸில் இடமில்லை. அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். இனி அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் காவல் துறைக்குமே உள்ளது’ என்றாா்.

தகுதிநீக்கம் செய்ய பேரவைத் தலைவா் பரிசீலனை

ராகுல் மாங்கூட்டத்திலை தகுதிநீக்கம் செய்ய சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கேரள பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்ஷீா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘முதல் முறையாக ஒரு பேரவை உறுப்பினா் மீது இத்தனை பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த விவகாரம் சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். ராகுல் மாங்கூட்டத்திலை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com