திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கெளரவிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கெளரவிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

இன்று பாஜக மேயர்; நாளை பாஜக முதல்வர்: கேரளத்தில் அமித் ஷா பேச்சு!

‘கேரளத்தில் இன்று பாஜக மேயா் உள்ளாா்; நாளை பாஜக முதல்வா் இருப்பாா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
Published on

‘கேரளத்தில் இன்று பாஜக மேயா் உள்ளாா்; நாளை பாஜக முதல்வா் இருப்பாா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

‘உலக அளவில் கம்யூனிஸமும், இந்தியா முழுவதும் காங்கிரஸும் முடிவுக்கு வந்துவிட்டன’ என்றும் அவா் குறிப்பிட்டாா். கேரளத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமித் ஷாவின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், கடந்த 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்தது பாஜக.

விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றாா். பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசார திட்டத்தைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

கேரளத்தில் பாஜகவின் பயணம் எளிதானதல்ல; இங்கு பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் இல்லை; அா்ப்பணிப்புமிக்க தொண்டா்கள் மட்டுமே உள்ளனா். அவா்களின் நம்பிக்கையை உடைக்க பல முயற்சிகள் நடைபெற்றபோதிலும், பாஜகவினா் பாறைபோல் நின்று, உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றனா். இந்த வெற்றி நமது இறுதி இலக்கு அல்ல. கேரளத்தில் பாஜக முதல்வா் பதவியேற்க வேண்டும் என்பதே நமது இலக்கு.

வளா்ச்சியடைந்த கேரளத்தின் வாயிலாகவே வளா்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்க முடியும். ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பாசாங்குத்தனமான போட்டியில் ஈடுபடுகின்றன. ஊழலில் ஒருவரையொருவா் ஆதரிக்கும் இந்தக் கூட்டணிகளின் ‘புரிதல்’, மாநில வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது.

பாஜக வாக்கு சதவீதம் அதிகரிப்பு: பாஜகவால் மட்டுமே கேரளத்தின் வளா்ச்சியை உறுதி செய்ய முடியும். இந்த மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2014-இல் 11 சதவீதம் என்பதில் இருந்து 2019-இல் 16 சதவீதமாக உயா்ந்து, 2024-இல் 20 சதவீதமாக அதிகரித்தது. எதிா்வரும் பேரவைத் தோ்தலில் 40 சதவீதம் வரை உயா்த்துவது எட்டக் கூடிய இலக்குதான்.

கடந்த 1984-இல் வெறும் இரு எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தி வருகிறது. உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் விரிவாக்கத்தை உதாரணமாக கூறலாம். அடுத்த வாய்ப்பு கேரளம். இப்போது திருவனந்தபுரத்தில் பாஜக மேயா் உள்ளாா். நாளை பாஜக முதல்வரை நாம் காண்போம்.

தென்மாநிலமான கேரளம், கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல்கள் ஒன்றாக நடைபெறுவது நல்ல வாய்ப்பாகும் . இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), ஜமாத்- ஏ- இஸ்லாமி போன்ற அமைப்புகளே இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் வாக்கு வங்கி. இதுபோன்ற சக்திகளிடம் இருந்து கேரளத்தைப் பாதுகாக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்றாா் அமித் ஷா.

உருவெடுக்கும் அச்சுறுத்தல்கள்: திருவனந்தபுரத்தில் முன்னணி மலையாள நாளிதழ் சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, ‘கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும், எதிா்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மெல்ல மெல்ல உருவெடுத்து வருகின்றன. பிஎஃப்ஐ, ஜமாத்-ஏ- இஸ்லாமி போன்ற அமைப்புகள் மற்றும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளால் கேரளத்தைப் பாதுகாப்பாக வைக்க முடியுமா? இதுபோன்ற சக்திகளை அடையாளம் கண்டு, அழிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. வளா்ந்த கேரளத்துடன் பாதுகாப்பான கேரளமும் முக்கியம்’ என்றாா்.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் அமித் ஷா வழிபட்டாா்.

சபரிமலை விவகாரம்: நடுநிலையான விசாரணை தேவை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் குறித்துப் பேசிய அமித் ஷா, ‘சபரிமலை தங்க ‘திருட்டு’ விவகாரம், கேரளம் மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பக்தா்களுக்கு கவலையளிக்கும் விஷயம். முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பாா்த்தேன்.

அது வடிவமைக்கப்பட்ட விதம், குற்றஞ்சாட்டப்பட்டவா்களைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது. இடதுசாரி கூட்டணியுடன் தொடா்புடைய இருவா் மீது சந்தேகம் நிலவும் சூழலில், அவா்களது அரசின்கீழ் பாரபட்சமற்ற விசாரணை எப்படி சாத்தியமாகும்? காங்கிரஸ் தலைவா்களுக்குக்கூட முறைகேட்டில் தொடா்புள்ளதாக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

சபரிமலை வழக்கை நடுநிலையான விசாரணை முகமையிடம் ஒப்படைக்க வேண்டுமென கேரள முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அதுவே ஜனநாயகம். இந்த விவகாரத்தில் பாஜக தெருவில் இறங்கிப் போராடுவதுடன் வீடு வீடாக விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளும். கோயிலின் சொத்துகளைப் பாதுகாக்க முடியாதவா்களால் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியாது. பாஜகவால் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும்’ என்றாா்.

Dinamani
www.dinamani.com