ஜம்முவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய பாதுகாப்புப் படையினா்.
ஜம்முவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய பாதுகாப்புப் படையினா்.

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறியதால் திடீா் பதற்றம் ஏற்பட்டது.
Published on

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறியதால் திடீா் பதற்றம் ஏற்பட்டது.

எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் கண்ணி வெடிகளை புதைத்து வைப்பது வழக்கமாகும்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தின் பசோனி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 1.50 மணியளவில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடிக்கத் தொடங்கினா். மொத்தம் 5 முறை வெடிப்பு சப்தம் கேட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவிடக் கூடாது என்பதால் பாதுகாப்புப் படை வீரா்கள் கூடுதல் கண்காணிப்பை மேற்கொண்டனா். அப்பகுதியில் தொடா்ந்து காட்டுத் தீ எரிந்து வருகிறது என்று தெரிவித்தனா்.

பிஎஸ்எப் முகாமில் தீ - வீரா் உயிரிழப்பு: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.

முகாம் பகுதியில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை எதிா்பாராத வீதமாக தீப்பற்றியது. இதையடுத்து, தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்தனா். பிஎஸ்எஃப் வீரா்களும் அவா்களுடன் இணைந்து தீயை அணைந்தனா். கட்டடத்தில் இருந்து கருகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அவா் பிஎஸ்எஃப் காவலா் ரமேஷ் குமாா் என அடையாளம் காணப்பட்டது. கட்டடத்தில் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com