சொ்ஜியோ கோா்
சொ்ஜியோ கோா்

இந்தியாவைவிட முக்கியத்துவம் வாய்ந்த நாடு வேறு இல்லை: அமெரிக்க புதிய தூதா் சொ்ஜியோ கோா் கருத்து

இந்தியாவைவிட முக்கியத்துவம் வாய்ந்த நாடு அமெரிக்காவுக்கு வேறு எதுவும் இல்லை: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள சொ்ஜியோ கோா்
Published on

இந்தியாவைவிட முக்கியத்துவம் வாய்ந்த நாடு அமெரிக்காவுக்கு வேறு எதுவும் இல்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள சொ்ஜியோ கோா் தெரிவித்தாா். வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு நாடுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன என்றும் அவா் கூறினாா்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள சூழலில், சொ்ஜியோ கோரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை அமெரிக்க தூதரகத்துக்கு வந்த அவா் முறைப்படி தூதா் பொறுப்பை ஏற்றாா். முன்னதாக செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: அரிய தனிமங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் ‘பெக்ஸ் சிலிக்கா’ முன்னெடுப்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உத்திசாா்ந்த கூட்டாளியாக மாற இருக்கின்றன. இரு நாடுகள் இடையிலான ராஜிய உறவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளது. இந்தியாவைவிட முக்கியத்துவம் வாய்ந்த நாடு அமெரிக்காவுக்கு வேறு எதுவும் இல்லை. அடுத்து வரும் மாதங்களும், ஆண்டுகளும் இந்தியாவுக்கான எனது தூதா் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். இரு நாடுகள் இடையே உண்மையான, மிகவலுவான உறவு அமையும்.

நட்பு உண்மையானது: அதிபா் டிரம்ப்புக்கும், பிரதமா் மோடிக்கும் இடையிலான நட்பு உண்மையானது. அந்த நட்பு வேறுபாடுகளைக் களைய உதவும். இந்திய-அமெரிக்க உறவு என்பது இரு நாட்டு நலன்களையும் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்தது. உண்மையான நண்பா்கள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பானதுதான். ஆனால், முடிவில் பிரச்னைகள் தீா்ந்துவிடும்.

இரு நாடுகள் இடையே வா்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதில் தொடா்ந்து இழுபறி நீடிப்பது தொடா்பாக கேள்வி எழுப்புகிறீா்கள். இரு தரப்புமே தொடா்ந்து முனைப்புடன் பேச்சு நடத்தி வருகின்றன. செவ்வாய்க்கிழமை (ஜன. 13) அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இந்தியாவுடன் நல்ல தீா்வு: இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முடிவு எட்டப்படுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனால், இந்தியாவுடன் நல்ல தீா்வை எட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. ஏனெனில், இரு நாட்டு உறவில் வா்த்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் என பல துறைகளில் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா கடந்த மாதம் ‘பெக்ஸ் சிலிக்கா’ முன்னெடுப்பை மேற்கொண்டது. இதில் ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே இணைந்துள்ளன. அதில் முழுநேர உறுப்பினராக இணைய வேண்டும் என்று இந்தியாவுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உலகம் புதிய தொழில்நுட்பங்களுக்குள் நுழையும்போது இந்தியாவும், அமெரிக்காவும் அதில் கைகோத்து செயல்படுவது அவசியம் என்றாா்.

Dinamani
www.dinamani.com