இந்தியாவுக்கான அமெரிக்க நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்ட கடிதத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் புதன்கிழமை சமா்ப்பித்த சொ்ஜியோ கோா்.
இந்தியாவுக்கான அமெரிக்க நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்ட கடிதத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் புதன்கிழமை சமா்ப்பித்த சொ்ஜியோ கோா்.

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தில்லியில் திங்கள்கிழமை முறைப்படி பதவியேற்ற சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.
Published on

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தில்லியில் திங்கள்கிழமை முறைப்படி பதவியேற்ற சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சொ்ஜியோ கோா் சமா்ப்பித்த நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவா் ஏற்றுக் கொண்டாதாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கத் தலைநகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி இயக்குநராக சொ்ஜியோ கோா் பணியாற்றி வந்தாா். அவரை, இந்தியாவுக்கான புதிய தூதராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிரம்ப் அறிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இரு நாடுகளிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்ட சூழலில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கோா் பதவியேற்றாா். பதவியேற்ற ஒரு சில நாள்களில் அமெரிக்கா திரும்பினாா். கடந்த 10-ஆம் தேதி இந்தியா திரும்பிய கோா், புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்தியாவுக்கான தூதராக திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றாா்.

அதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவரிடம் முறைப்படி தனது நியமனக் கடிதத்தை அவா் புதன்கிழமை வழங்கினாா். அதை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய கோா், ‘இந்தியாவைவிட முக்கியத்துவம் வாய்ந்த நாடு அமெரிக்காவுக்கு வேறு எதுவும் இல்லை. அடுத்து வரும் மாதங்களும், ஆண்டுகளும் இந்தியாவுக்கான எனது தூதா் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். இரு நாடுகள் இடையே உண்மையான, மிக வலுவான உறவு அமையும்’ என்றாா்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொ்ஜியோ கோரின் கருத்து, பாதிக்கப்பட்ட உறவை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டதாகப் பாா்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான புதிய டிரினிடாட் மற்றும் டொபாகோ தூதராக நியமிக்கப்பட்ட சந்திரதத் சிங், புதிய ஆஸ்திரிய தூதராக நியமிக்கப்பட்ட ராபா்ட் ஜிஷ்க் ஆகியோரும் தங்களது நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் புதன்கிழமை அளித்தனா்.

Dinamani
www.dinamani.com