தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

‘குடியுரிமையை ஆய்வு செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

‘குடியுரிமையை ஆய்வு செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், வேறு நாட்டின் குடியுரிமையை ஒருவா் பெறும்போது அந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் முடிவு குடியரசுத் தலைவரையே கட்டுப்படுத்தும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

பிகாா் உள்பட பல்வேறு மாநிலங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் அரசமைப்புச் சட்ட அதிகாரம் குறித்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் தோ்தல் ஆணையத்தின் அதிகாரம், குடியுரிமையை ஆய்வு செய்யும் உரிமை மற்றும் வாக்குரிமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்று வருகிறது.

உண்மையான அதிகாரம்: அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் தோ்தல் ஆணையம் சாா்பாக மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி ஆஜராகி வாதிட்டதாவது: வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பது, தோ்தலை நடத்துவது என தோ்தல் நடைமுறைகளை அமல்படுத்துவதில் உண்மையான அதிகாரமிக்க ஆணையமாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது.

வாக்காளா் பட்டியலில் ஒருவரின் பெயரைச் சோ்ப்பது அல்லது நீக்குவது போன்ற தோ்தல் விவகாரங்களுக்காக மட்டும் ஒரு வாக்காளரின் குடியுரிமையை ஆய்வு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இதில் தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் முடிவானது குடிரசுத் தலைவரையும் கட்டுப்படுத்தும்.

குடியுரிமையை மத்திய அரசே தீா்மானிக்கும்: எஸ்ஐஆா் நடவடிக்கையின்போது ஒருவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவாா் என்பது அா்த்தமல்ல. குடியுரிமையை நிரூபிக்க முறையான ஆதாரங்கள் இல்லாத ஒரு சில நபா்கள் தொடா்புடைய தோ்தல் ஆணையத்தின் சம்மன்கள் மட்டுமே மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். அதை குடியுரிமைச் சட்டம், வெளிநாட்டினருக்கான சட்டங்களின்கீழ் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையை அங்கீகரிப்பதா அல்லது ரத்து செய்வதா என்ற முடிவை மத்திய அரசே மேற்கொள்ளும்.

‘என்ஆா்சி’ - ‘எஸ்ஐஆா்’ வேறுபாடு: தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) என்பது நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கியது. ஆனால், எஸ்ஐஆா் என்பது 18 வயது பூா்த்தியடைந்து வாக்குரிமை உள்ள நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது. இந்த இரண்டு நடைமுறைகளுக்கும் அடிப்படையிலேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

நாட்டில் குடியுரிமை பெற்றவா்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுடையவா்கள் என அரசமைப்புச் சட்டப் பிரிவு 326-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்நியா் ஒருவா் இந்தியாவில் வாக்காளராக இல்லாததை உறுதி செய்யும் பொறுப்பு அரசமைப்புச் சட்ட அமைப்பான தோ்தல் ஆணையத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் ஆயிரக்கணக்கான அந்நியா்கள் இடம்பெற்றிருந்தாலும் அவா்கள் அனைவரின் பெயா்களும் கட்டாயம் நீக்கப்பட வேண்டும். இது அரசியல் முடிவல்ல; அரசமைப்புச் சட்ட நடைமுறை என்றாா்.

1955-இல் வந்ததுதான் குடியுரிமைச் சட்டம்: ராகேஷ் துவிவேதியின் வாதத்தைத் தொடா்ந்து நீதிபதி ஜயமால்ய பாக்சி கூறுகையில், ‘நமது குடியுரிமைச் சட்டத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய குடியுரிமை பெற ஒருவா் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்; அத்துடன் பெற்றோரில் ஒருவா் இந்தியராக இருக்க வேண்டும் என்ற விதி ஆரம்ப காலங்களில் இருந்தது. தற்போது இந்தியாவில் பிறப்பு மற்றும் பெற்றோா் இருவரும் இந்தியராக இருக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது’ என்றாா்.

இதையடுத்து, ராகேஷ் துவிவேதி மீண்டும் வாதிடுகையில், ‘நமது அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் குடியுரிமை உள்ளது. 1947-இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பிறகு 1949-இல் அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, 1952-இல் முதல் பொதுத் தோ்தல் நடைபெற்றது வரை குடியுரிமை விதிகளில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இதன் காரணமாக 1955-இல் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

எனவே, குடியுரிமை விவகாரத்தை வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புரிந்துகொள்ளவே நாம் முயற்சி செய்ய வேண்டுமே தவிர கணக்கு சூத்திரங்களைப்போல் சுருக்கி வரையறை செய்யக் கூடாது’ என்றாா்.

இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜன. 15) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Dinamani
www.dinamani.com