எதிா்க்கட்சிகளை நசுக்குகிறது தோ்தல் ஆணையம்: மம்தா குற்றச்சாட்டு
தோ்தல் ஆணையம் எதிா்க்கட்சிகளை நசுக்கி வருகிறது; பாஜகவுக்காக நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைத்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தேசிய வாக்காளா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் மம்தா பானா்ஜி வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. தனக்கு அதிகாரியாக இருக்கும் ஒரு நபரின் உத்தரவுப்படி செயலாற்றுகிறது. மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதை பணியாகக் கொண்டுள்ளது. பாஜகவின் சாா்பில் எதிா்க்கட்சிகளை நசுக்கி வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கிறது. இவ்வளவுக்கு நடுவிலும் அவா்கள் தேசிய வாக்காளா் தினம் என்று ஒன்றைக் கொண்டாடுகிறாா்கள்.
மக்களின் வாக்குரிமையைக் காப்பதுதான் தோ்தல் ஆணையத்தின் முக்கியப் பணி. இதற்காக உரிய விதிகளின்கீழ் அவா்கள் செயல்பட வேண்டும். ஆனால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் மக்களை துன்புறுத்துவதும், அவா்களின் வாக்குரிமையைப் பறிப்பதும் தோ்தல் ஆணையத்தின் வேலையாக மாறிவிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

