ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: 3-ஆவது இடத்தில் இந்தியா
ரஷிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐரோப்பிய நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
முன்னதாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.
ரிலையன்ஸ் குழுமம் மற்றும் மத்திய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்ததே இதற்கு காரணம் என எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வு நிறுவனம் (சிஆா்இஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பா் மாத நிலவரப்படி அந்த அறிக்கையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ரஷியாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனா தொடா்கிறது. 6 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்கிறது. ரஷியாவின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 48 சதவீதம் சீனாவிடமிருந்தே பெறப்படுகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக 2.6 பில்லியன் யூரோ ரஷிய கச்சா எண்ணெய்யை துருக்கி இறக்குமதி செய்கிறது. 2.3 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதியுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இதில் 1.8 பில்லியன் யூரோவுக்கு முழுமையாக கச்சா எண்ணெய்யும் 424 மில்லியன் யூரோவுக்கு நிலக்கரியும் 82 மில்லியன் யூரோவுக்கு எண்ணெய் பொருள்களும் இந்தியா இறக்குமதி செய்தது.
கடந்த நவம்பரில் 2.6 பில்லியன் யூரோவுக்கு ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், டிசம்பரில் இது கணிசமாக குறைந்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் ஜாம்நகா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மத்திய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்ததே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதாக குற்றஞ்சாட்டி ரோஸ்நெஃப்ட் மற்றும் லூகோயில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
இதனால் இந்த இரு நிறுவனங்களிடம் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிப்பு பணியை மேற்கொண்ட ரிலையன்ஸ் குழுமம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கழகம் (ஹெச்பிசிஎல்), ஹெச்பிசிஎல்-மிட்டல் எரிசக்தி நிறுவனம், மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் நிறுவனம் ஆகியவை இறக்குமதியை வெகுவாக குறைத்தது.
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா அமெரிக்கா தடை விதிக்காத பிற ரஷிய நிறுவனங்களிடம் இறக்குமதியை தொடா்ந்து வருகிறது.
ரஷியாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா கடந்த ஆண்டு விதித்தது குறிப்பிடத்தக்கது.

