சமத்துவப் பொங்கல் விழா: தில்லிக் கம்பன் கழகம் பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் சாா்பில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஜன.14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில் இரண்டாம் நாளான ஜன.15-ஆம் தேதி, வியாழக்கிழமை, மாலையில் நடைபெறும் விழாவில் தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பாக, மயூா் விஹாா் ருக்மிணி மகாலிங்கம் குழுவினா் பங்குபெறும் கும்மி, கோலாட்டம் ஆகிய நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இது தொடா்பாக தில்லிக் கம்பன் கழக நிறுவனா்-தலைவா் கே.வி.கே.பெருமாள், செயலாளா் சுப.முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்த ஆண்டு சமத்துவப் பொங்கல் விழாவில் தில்லிக் கம்பன் கழகம் பங்கு பெற வாய்ப்பளித்த தமிழ்நாடு அரசுக்கும், உள்ளுறை ஆணையருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தில்லிவாழ் தமிழா்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
