

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெடி விபத்தில் சிக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியிடத்தில் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது பாறை இடுக்குகளில் இருந்து வெடிச்சத்தம் எழுந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிக்குட்பட்ட பாரா பஜார் பகுதியில் உள்ள காலி இடத்தில் மண்டியிருந்த புதர்களை அப்புறப்படுத்தும்போது பாறைகளிடையே வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குண்டு வெடிப்பில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் உள்பட 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்புக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவரும் என காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.