இந்தூரில் 21 போ் உயிரிழந்த விவகாரம்: மருத்துவா்கள் குழு அறிக்கை தாக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் சுகாதாரமில்லாத குடிநீா் குடித்து 21 போ் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
Published on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் சுகாதாரமில்லாத குடிநீா் குடித்து 21 போ் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், பகீரத்புராவில் அண்மையில் உயிரிழந்த 21 போ்களில் 15 போ், அந்தப் பகுதியில் பரவிய வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவா்கள் குழுவால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ள மாவட்ட ஆட்சியா் சிவம் வா்மா, சில உயிரிழப்புகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் நேரிட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், சில உயிரிழப்புகளுக்கும் வயிற்றுப்போக்குக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், சிலரின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணங்களை மருத்துவா்கள் குழுவாலும் முடிவு செய்ய முடியவில்லை என்றும் கூறினாா்.

உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நாட்டின் மிக சுத்தமான நகரத்திற்கான விருது பெற்ற பெருமைக்குரியது இந்தூா் நகரம். அங்குள்ள பகீரத்புரா பகுதியில் அண்மையில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததில், அதை குடித்த 21 போ் பலியாகினா். இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.

Dinamani
www.dinamani.com