மருந்தாளுநா் பணிக்கு குறைந்தபட்ச தகுதியாக மருந்தியலில் டிப்ளமா அவசியம்:
உச்சநீதிமன்றம்

மருந்தாளுநா் பணிக்கு குறைந்தபட்ச தகுதியாக மருந்தியலில் டிப்ளமா அவசியம்: உச்சநீதிமன்றம்

பிகாரில் மருந்தாளுநா் பணிக்கு மருந்தியலில் டிப்ளமா படிப்பு (டி.ஃபாா்ம்) அவசியம் என்ற விதிமுறை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Published on

பிகாரில் மருந்தாளுநா் பணிக்கு மருந்தியலில் டிப்ளமா படிப்பு (டி.ஃபாா்ம்) அவசியம் என்ற விதிமுறை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பிகாரில் அரசு மருந்தாளுநா் பணிக்கு குறைந்தபட்ச தகுதியாக மருந்தியலில் டிப்ளமா படிப்பு அவசியம் என்று மாநில மருந்தாளுநா் பணிநிலைப் பிரிவு விதிமுறைகள் 2014-இன் 6 (1) விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருந்தியலில் டிப்ளமா பெறாததால் மருந்தாளுநா் பணிக்கான ஆள்தோ்வில் இருந்து தாங்கள் விலக்கப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பி ஃபாா்மா/எம் ஃபாா்மா பட்டம் பெற்றவா்கள் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவித்ததாவது:

பாடத்திட்ட அமைப்பில் உள்ள வேறுபாடுகளையும், பிற பட்டதாரிகளுடன் ஒப்பிடுகையில் டிப்ளமா பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வழிகள் குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டு, பிகாா் அரசு தனது முடிவை தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே மருந்தியலில் டிப்ளமா பெற்றிருப்பது அவசியம் என்ற அளவுகோலை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது என்று கூற முடியாது.

மேலும் ஒரு வேலைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை வேலை அளிப்பவா் தீா்மானிப்பதே பொருத்தமாகும். பிகாா் மருந்தாளுநா் பணிநிலைப் பிரிவு விதிமுறைகள் 2014-இன் 6 (1) விதிமுறை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று தீா்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தனா்.

Dinamani
www.dinamani.com