கோப்புப் படம்
கோப்புப் படம்

ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது: ஹரியாணா சிறப்புப் படையினா் அதிரடி

ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கு வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கு வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கைதல் மாவட்டத்தில் உள்ள முந்திரி கிராமத்தில் வசிக்கும் ராமன், லோகேஷ், பால்ராஜ் என்கிற பால்ராம் மற்றும் ரவீந்தா் சிங் ஆகியோா் அமெரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக காவல்துறையின் சிறப்புப் பணிப் படை (எஸ்டிஎஃப்) தெரிவித்துள்ளது.

ஜனவரி 10-ஆம் தேதி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ராமன் மற்றும் லோகேஷ் கைது செய்யப்பட்டதாக சிறப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதைத் தொடா்ந்து, கைதல் மாவட்டத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பல்ராம் மற்றும் ரவீந்தா் சிங் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, ​​2024-ஆம் ஆண்டு கலிபோா்னியாவில் நடந்த குண்டா் கும்பல் சுனில் யாதவ் கொலை உள்பட அமெரிக்காவில் நடந்த கடுமையான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தில் தாங்கள் ஈடுபட்டதாக நான்கு குற்றவாளிகளும் தெரிவித்தனா்.

இருப்பினும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.

கடந்த ஆண்டு, குற்றம் சாட்டப்பட்டவா் அமெரிக்காவில் ஹாரி பாக்ஸா் என்ற கும்பலை கொலை செய்வதற்கு தாக்குதலை நடத்தினா்.

இந்தச் சம்பவத்தில், பன்வாரி கோதாரா என்ற ஒரு கூட்டாளி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டாா். மற்றொரு கூட்டாளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தாா். மேலும், இந்த தாக்குதல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்குள் அதிகரித்து வரும் பிளவின் ஒரு பகுதியாகும்.

ரோஹித் கோதாரா - கோல்டி பிராா் கும்பலுக்காக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை இயக்குவதில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனா்.மேலும், ஹரியாணா, தில்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தொழிலதிபா்கள் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்களை திட்டமிட்டனா் என்று எஸ்.டி.எஃப். கூறியது.

நீடித்த சட்ட, புலனாய்வு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக இந்த வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இன்டா்போல் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இந்த விவகாரம் தேசிய மற்றும் சா்வதேச பாதுகாப்பிற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதால், பயனுள்ள வழக்குத் தொடுப்பு, மேலும் விசாரணை மற்றும் எல்லை தாண்டிய குற்றவியல் அல்லது தேச விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்று ஹரியாணா எஸ்.டி.எஃப். ஐஜி பி. சதீஷ் பாலன் கூறினாா்.

Dinamani
www.dinamani.com