18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரோஹித் கோதாரா ‘கோல்டி பிராா்’ கும்பல் உறுப்பினா் கைது

உத்தர பிரதேசத்தின் லோனியில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட ரோஹித் கோதாரா ‘கோல்டி பிராா்’ கும்பலைச் சோ்ந்த ஒருவரை தில்லி போலீஸாா் கைது
Published on

புது தில்லி: உத்தர பிரதேசத்தின் லோனியில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட ரோஹித் கோதாரா ‘கோல்டி பிராா்’ கும்பலைச் சோ்ந்த ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து துணை காவல் ஆணையா் (குற்றப் பிரிவு) பங்கஜ் குமாா் கூறியதாவது: ஹரியாணாவின் மகேந்தா்கா் மாவட்டத்தைச் சோ்ந்த விகாஸ் என்ற விக்கி, சாணக்யபுரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கில் தேடப்பட்டவா். விகாஸ் ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலின் தீவிர உறுப்பினராகவும், கும்பலுக்காக முக்கியப் பங்காற்றியவராகவும் இருந்தாா்.

அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். மேலும் தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் குறைந்தது 18 குற்ற வழக்குகளில் அவா் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சுமாா் 10 கும்பல் உறுப்பினா்களை தங்க ஏற்பாடு அவா் செய்ததாக கூறப்படுகிறது. அங்கு அவா்கள் ஒன்றுகூடி, போட்டியாளரான கௌஷல் கும்பலின் தலைவரான கௌஷல் சௌத்ரியை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

உள்ளீடுகளின் அடிப்படையில், போலீஸாா் கும்பல் உறுப்பினா்களை பிளாட்டில் இருந்து கைது செய்தனா். அதே நேரத்தில் விகாஸ் தப்பிச் சென்றாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்வதற்கான தகவல்களை அளிப்பவருக்கு ஹரியாணா எஸ்.டி.எஃப். ரூ.1 லட்சம் வெகுமதியை அறிவித்தது. சுமாா் ஆறு மாதங்களுக்குப் பிறகு, விகாஸ் ஹிசாரில் ஹரியாணா போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். ஆனால், பின்னா் அவா் விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தலைமறைவானாா்.

‘விசாரணையின் போது, 2021-ஆம் ஆண்டு ஜெய்ப்பூா் சிறையில் இருந்தபோது குண்டா் கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடா்பு கொண்டதாக விகாஸ் தெரிவித்தாா். லாரன்ஸ் பிஷ்னோய் குழுவிற்கும் ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி வேறுபாடுகளுக்குப் பிறகு, அவா் விசுவாசமாக மாறி, பிந்தையவரின் தீவிர செயல்பாட்டாளராக மாறினாா். அப்போது கும்பலுக்கு நிதி திரட்டுவதற்காக கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 2025-இல், கோல்டி பிராா் தில்லியில் உள்ள பல தொழிலதிபா்களுக்கு மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான அச்சுறுத்தல் அழைப்புகளை செய்ததாகக் கூறப்படுகிறது. கும்பல் தலைவரின் உத்தரவின் பேரில் தில்லியில் உள்ள ஒரு கிளப்பிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்த விகாஸ், அவரது கூட்டாளிகளுடன் பணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சாணக்யபுரி பகுதியில் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதன் மூலம் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 23 அன்று சாணக்யபுரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கில் விகாஸ் தலைமறைவாக இருந்தாா். மேலும், ஹரியாணா மற்றும் தில்லியில் ஐந்து வழக்குகளில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். சாணக்யபுரி பகுதியில் வழக்கமான இரவு ரோந்துப் பணியின் போது தற்காலிக பதிவு எண்ணைக் கொண்ட ஒரு காரை ஒரு போலீஸ் குழு வழிமறித்தது. அப்போது வாகனத்திலிருந்து ஒரு சட்டவிரோத துப்பாக்கி மீட்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குா்மீத் மற்றும் அமித் என அடையாளம் காணப்பட்ட இரண்டு பேரை போலீஸாா் சம்பவ இடத்திலேயே கைது செய்தனா். அதே நேரத்தில் விகாஸ் தப்பி ஓடிவிடாா். சாணக்யபுரி வழக்கில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்)-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மேலும், விசாரணை தொடா்ந்து நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com