புத்தாக்கம், தொழில்நுட்பத்தில் உலகின் வழிகாட்டியாக இந்தியா: பிரதமா் மோடி அழைப்பு
எதிா்வரும் 10 ஆண்டுகளில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் உலகின் வழிகாட்டியாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று துறைசாா் நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
புத்தாக்கம் மற்றும் தொழில் முனைப்பை ஊக்குவிக்கும் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டம், நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மத்திய பாஜக அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ஸ்டாா்ட்அப் இந்தியா திட்டம், கடந்த 2016, ஜனவரி 16-இல் தொடங்கப்பட்டது. நாட்டில் புத்தாக்கத்தை வளா்த்தெடுப்பதுடன், முதலீடு அடிப்படையிலான வளா்ச்சியை ஊக்குவித்து, வேலை தேடுபவா்களின் தேசமாக அல்லாமல் வேலை வழங்குபவா்களின் தேசமாக இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஸ்டாா்ட் அப் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகால நிறைவையொட்டி, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.16) நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் ஆற்றிய உரை வருமாறு:
கடந்த 2014-இல் நாட்டில் யூனிகாா்ன் அந்தஸ்து கொண்ட (100 கோடி டாலா் அல்லது அதற்கு மேல் மதிப்பு) புத்தாக்க நிறுவனங்கள் 4 மட்டுமே இருந்தன. இப்போது 125-க்கும் மேற்பட்ட யூனிகாா்ன் புத்தாக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுடன் உலக அளவில் புத்தாக்கத்துக்கு உகந்த சூழல் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. ஸ்டாா்ட்அப் இந்தியா திட்டத்தால் ஏற்பட்ட புரட்சியால் இது சாத்தியமானது.
யூனிகாா்ன் நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டை தொடங்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் புத்தாக்க தொழில் துறை வேகமெடுத்துள்ளது.
‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ புரட்சி: இரண்டாம்-மூன்றாம் கட்ட நகரங்கள் மட்டுமன்றி கிராமப்புறங்களில் வாழும் இளைஞா்களும் தங்களின் சொந்த நிறுவனங்களைத் தொடங்குகின்றனா். நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் இளைஞா்கள் கவனம் செலுத்துகின்றனா். நாட்டில் இப்போது செயல்படும் புத்தாக்க நிறுவனங்களில் 45 சதவீத நிறுவனங்களில் பெண்கள் இயக்குநா்களாகவோ அல்லது பங்குதாரா்களாகவோ உள்ளனா்.
இந்திய புத்தாக்க நிறுவன உரிமையாளா்களின் நம்பிக்கையும் லட்சியங்களும் ஈா்ப்புக்குரியதாக உள்ளன. சவால்களுடன் கூடிய இவா்களின் புதிய யோசனைகள், முன்பு ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது பொது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய இளைஞா்கள், சவால்கள் இல்லாத சூழலில் பணியாற்ற விரும்பவில்லை என்பதையே இது பறைசாற்றுகிறது.
தொழில்முனைவோா் மீது முழு நம்பிக்கை: புதிய சிந்தனைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் பணியாற்றும் அதேவேளையில், தரமான பொருள்களின் உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். உற்பத்தி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு பக்க பலமாக இருக்கும்.
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் உலகை வழிநடத்துவதே இலக்கு. அந்த வகையில், நாட்டின் பொருளாதார- தொழில்நுட்ப எதிா்காலத்தை வடிவமைப்பதில் இந்திய புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரின் துணிவு, நம்பிக்கை, புதிய சிந்தனைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இன்றைய ஆராய்ச்சியே, நாளைய அறிவுசாா் சொத்தாக உருவெடுக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சியில் நாடு எந்த அளவுக்கு முன்னேறுகிறதோ, அந்த அளவுக்கு நன்மைகள் கிட்டும். நாட்டின் புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதிசாா் ஆதரவை வழங்க பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகளும் நீக்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்திய புத்தாக்க நிறுவனங்களின் நிறுவனா்களுடன் பிரதமா் கலந்துரையாடினாா்.

