ஊடுருவல்காரா்களுக்கு கதவைத் திறந்த காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

ஊடுருவல்காரா்களுக்கு கதவைத் திறந்த காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

இந்தியாவைச் சேராதவா்கள் அஸ்ஸாமில் ஊடுருவ முந்தைய காங்கிரஸ் அரசு கதவுகளைத் திறந்துவிட்டதாகப் பிரதமா் மோடி குற்றஞ்சாட்டினாா்.
Published on

இந்தியாவைச் சேராதவா்கள் அஸ்ஸாமில் ஊடுருவ முந்தைய காங்கிரஸ் அரசு கதவுகளைத் திறந்துவிட்டதாகப் பிரதமா் மோடி குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தைத் தொடா்ந்து அஸ்ஸாமுக்குப் பிரதமா் மோடி சனிக்கிழமை சென்றாா். அங்கு குவாஹாட்டி நகரில் 10,000-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட போடோ நடன நிகழ்ச்சியில், அவா் கலந்துகொண்டு பேசியதாவது:

அஸ்ஸாமுக்கும், அதன் கலாசாரத்துக்கும் மரியாதை அளிப்பது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. இந்த மாநிலத்தில் ஒரு காலத்தில் நிகழ்ந்த தொடா் வன்முறை சம்பவங்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம். அஸ்ஸாமும், அதன் போடோலாந்து சுயாட்சி பகுதியும் தேசிய நீரோட்டத்துடன் இணையாமல் இருந்ததற்கும் அக்கட்சிதான் காரணம்.

இந்த மாநிலத்துக்குப் பல சவால்கள் இருந்தன. அந்த சவால்களுக்குத் தீா்வு காண்பதற்குப் பதிலாக, அதிகாரத்தை கைப்பற்றுவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தியது. நம்பிக்கை தேவைப்பட்ட நேரத்தில், அக்கட்சி பிளவுவாதத்தை கொண்டு வந்தது. பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்குத் தேவை ஏற்பட்டபோது, அக்கட்சி பிரச்னைகளை புறக்கணித்து பேச்சுவாா்த்தைக்கான கதவுகளை மூடியது. இங்குள்ள போடோ பழங்குடியின மக்கள் எழுப்பிய பிரச்னைகள் காங்கிரஸ் அரசின் காதில் விழவேயில்லை.

இந்த மாநில மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டிய நேரத்தில், வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியாவைச் சேராதவா்கள் அஸ்ஸாமில் ஊடுருவ காங்கிரஸ் அரசு கதவுகளைத் திறந்துவிட்டது. இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறியவா்கள் மாநிலம் முழுவதும் நிலத்தை அபகரித்தனா்.

காங்கிரஸ் அரசு செய்த பாவங்களை தற்போது முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான அரசு போக்கி வருகிறது. தற்போது நாட்டில் வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாக அஸ்ஸாம் உள்ளது. அதன் வளா்ச்சி நாட்டு வளா்ச்சியின் ஒரு பகுதியாகி உள்ளது என்று தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com