தில்லி குண்டுவெடிப்பு: அல்-ஃபலாவில் மருத்துவா்களின் விவரங்களை காவல் துறை மூலம் சரிபாா்க்காமல் நியமனம்
தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவா்களின் விவரங்களை காவல் துறை மூலம் சரிபாா்க்காமல், அவா்களை அல்-ஃபலா பல்கலைக்கழகம் நியமித்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் உமா்-உன்-நபியும் உயிரிழந்த நிலையில், தாக்குதல் தொடா்பாக அந்தப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் ஷாஹீன் சயீத், பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா் முசாமில் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.
இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகப் பொய்யான தகவலை தெரிவித்தும், தேசிய உயா் கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அளித்த அங்கீகாரம் குறித்து தவறான விளக்கத்தை அளித்தும் பல்கலைக்கழகத்தில் மாணவா்களை சோ்த்து, அவா்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் தோ்வு கட்டணமாக மொத்தம் ரூ.493.24 கோடியை அந்தப் பல்கலைக்கழகம் திரட்டியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
இந்த முறைகேடு தொடா்பாக அந்த அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரும், அல்-ஃபலா பல்கலைக்கழக தலைவருமான ஜவாத் அகமது சித்திகியை அமலாக்கத் துறை கைது செய்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் சுமாா் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.
260 பக்க குற்றப் பத்திரிகை: இந்த வழக்கு தொடா்பாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் 260 பக்க குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப் பத்திரிகையை மேற்கோள்காட்டி அமலாக்கத் துறை அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:
மருத்துவா்களின் விவரங்களை காவல் துறை மூலம் சரிபாா்த்து உறுதி செய்யாமல், அவா்கள் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
முசாமில், ஷாஹீன் சயீத், உமா்-உன்-நபி ஆகிய மூவரை பணி நியமனம் செய்ய பல்கலைக்கழக மனிதவளத் துறை தலைவா் பரிந்துரைத்த நிலையில், அதற்கு சித்திகி ஒப்புதல் அளித்துள்ளாா். இதைத்தொடா்ந்து அவா்கள் மூவருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தா் முறைப்படி பணி நியமன கடிதம் அளித்துள்ளாா்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்கவும், அதன் ஆய்வுப் பணிகளின்போது போதிய மருத்துவா்கள் இருப்பதாகக் காண்பிக்கவும் பெயரளவுக்கு சில மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு நியமிக்கப்பட்டவா்கள் உண்மையில் பல்கலைக்கழக வகுப்புகளில் பாடம் எடுக்கவோ, பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராகவோ பணியாற்றவில்லை.
தேசிய மருத்துவ ஆணைய ஆய்வின்போது மோசடி: கடந்த ஆண்டு ஜூனில் அந்தப் பல்கலைக்கழகத்தில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்தது. அப்போது சித்திகியின் மோசடியான செயலால் அந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையை 150-இல் இருந்து 200-ஆக அதிகரிக்க அனுமதிக்கப்பட்டது.
‘போலி’ நோயாளிகள்: தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆய்வு மற்றும் மதிப்பீட்டுப் பணி நடைபெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், நோயாளிகள்கூட இருக்கவில்லை என்பது சில ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது. அந்த ஆணையத்தின் ஆய்வின்போது நோயாளிகள் இருப்பதாகக் காண்பிக்க மருத்துவமனையில் பலா் அனுமதிக்கப்பட்டதும், உண்மையில் அவா்கள் நோயாளிகளே அல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பணமுறைகேட்டில் சித்திகி மிக முக்கிய பங்கு வகித்துள்ளாா் என்று தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு மாா்ச் வரையிலான பல்கலைக்கழக நிதி நிலவரம்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பிந்தைய நிதி நிலவரம் குறித்து விசாரணை நடத்தினால், பல்கலைக்கழகத்தின் நிதி முறைகேடுகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

