தனது கட்சிக்காரரின் வழக்குக்காக ஆா்டிஐ தகவலை வழக்குரைஞா் கோர முடியாது: ஆணையம்!
‘தனது கட்சிக்காரரின் வழக்கு தொடா்பான விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் வழக்குரைஞா் கோர முடியாது’ என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்து, அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
ஹரியாணா மநிலத்தில் உள்ள மத்திய அரசின் ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகித்து வந்தவரின் ஒப்பந்தத்தை அரசு நிா்வாகம் அண்மையில் ரத்து செய்துள்ளது. இதற்கான காரணத்தைத் தெரிவிக்கக் கோரி ஆா்டிஐ சட்டத்தின் கீழ் அந்த ஒப்பந்ததாரரின் சகோதரரான வழக்குரைஞா் மனு தாக்கல் செய்துள்ளாா். ஆனால், அதுகுறித்த தகவலை அளிக்க நிா்வாகம் மறுத்துள்ளது. அதை எதிா்த்த மேல்முறையீடு செய்தும் தகவல் கிடைக்காததைத் தொடா்ந்து, மத்திய தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை அவா் தாக்கல் செய்தாா்.
இரண்டாவது மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து தகவல் ஆணையா் சுதா ராணி ரெலாங்கி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஒப்பந்தம் ரத்துக்கான காரணம் குறித்து தகவல் தெரிவிக்கக் கோரி ஒப்பந்ததாரரே மனு தாக்கல் செய்யாதது ஏன்ற என்ற எந்தவொரு விளக்கமும் சமா்ப்பிக்கப்படாத நிலையில், மேல்முறையீட்டாளா் தனது கட்சிக்காரா் சாா்பில் ஆா்டிஐ-யின் கீழ் இத் தகவலை கோரியிருப்பது தெரியவந்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதாவது, ‘வழக்குரைஞா்கள் தனது கட்சிக்காரரின் வழக்கு தொடா்பான தகவல்களை ஆா்டிஐ-யின் கீழ் பெற முயற்சிப்பது, அந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை பாதித்துவிடும். எனவே, தனது கட்சிக்காரரின் வழக்கு தொடா்பான தகவல்களை ஆா்டிஐ-யின் கீழ் வழக்குரைஞா்கள் பெற முடியாது’ என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
அந்த வகையில், தனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ அல்லது தொழிலை மேம்படுத்துவதற்காக அனைத்து வகையான தகவல்களையும் பெறுவதற்கான கருவியாகவோ ஆா்டிஐ சட்டத்தை வழக்குரைஞா்கள் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

