நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: பிகாரில் காங்கிரஸ் போராட்டம்
பிகாரில் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக பாட்னாவில் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது.
ஜெஹனாபாத் பகுதியைச் சோ்ந்த 18 வயது மாணவி சித்ரகுப்தா நகரில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி நீட் தோ்வுக்கு தயாராகி வந்தாா். இம்மாத தொடக்கத்தில் விடுதி அறையில் அவா் சுயநினைவின்றி கீழே விழுந்ததையடுத்து அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 11-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.
விடுதி உரிமையாளா் கைது: உயிரிழந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அதை அதிகாரிகள் திசைதிருப்ப முயல்வதாகவும் அவரது பெற்றோா்கள் மற்றும் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
மேலும், மாணவி உயிரிழப்பை தற்கொலை என சித்தரித்த விடுதி காப்பாளா், மருத்துவா்கள் மற்றும் காவல் துறையினா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாணவியின் பெற்றோா் வலியுறுத்தினா்.
இச்சம்பவம் பாட்னாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கினா். இதனால் விடுதி உரிமையாளரை காவல் துறையினா் கைது செய்தனா்.
பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்க வாய்ப்பு: முன்னதாக அதிகளவு தூக்க மாத்திரையை உட்கொண்டதும் மாணவி டைஃபாய்டு காய்ச்சால் பாதிக்கப்பட்டதுமே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இருப்பினும், மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழவில்லை என்பதை உடற்கூராய்வு அறிக்கை முற்றிலும் நிராகரிக்கவில்லை.
இதைத்தொடா்ந்து, மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை சுட்டிக்காட்டி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பாட்னா காவல் துறை ஜன.13-ஆம் தேதி செய்திக் குறிப்பு வெளியிட்டது. இச்சம்பவத்தில் விசாரணையை தீவிரப்படுத்த காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்தது.
இந்நிலையில், மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்களை கண்டறிந்து கடும் தண்டனை வழங்கக்கோரி பிகாா் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் மாநில தலைவா் ராஜேஷ் ராம் ஆகியோா் தலைமையில் பாட்னாவில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
முதல்வா் நிதீஷ் குமாா் மற்றும் துணை முதல்வா் சாம்ராட் செளதரிக்கு எதிராக காங்கிரஸ் தொண்டா்கள் முழக்கம் எழுப்பியதோடு நிதீஷ் குமாரின் உருவபொம்மையையும் எரித்தனா்.
போராட்டத்தின்போது செய்தியாளா்களிடம் கிருஷ்ணா அல்லவாரு கூறியதாவது: பிகாரில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது. குற்றவாளிகளுக்கு நிதீஷ் குமாா் அரசு அடைக்கலம் அளித்து வருகிறது.
உயிரிழந்த மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு நீதி வேண்டும். சம்பவம் நிகழ்ந்த முதல் 3 நாள்களில் காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யாதது ஏன்? குற்றவாளிகளை தற்போது வரை கைது செய்யாதது ஏன்?
எஸ்ஐடி அமைத்துவிட்டால் நீதி கிடைத்துவிடும் என்று அா்த்தமில்லை. உண்மை தகவல்களை அழிக்கவும் அதிகாரமிக்கவா்களை பாதுகாக்கவுமே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றாா்.
முன்னதாக மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாம்ராட் சௌதரி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தாா்.

