ஒடிஸா: புவனேசுவரம் சந்தையில் மிகப் பெரிய தீ விபத்து- 40 கடைகள் எரிந்து நாசம்
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள மிகப் பெரிய சந்தையின் ஒரு பகுயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 கடைகள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து மாவட்ட தலைமை தீயணைப்புத் துறை அதிகாரி ரமேஷ் சந்திர மாஜி கூறியதாவது:
சந்தையில் அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு உறங்கிக் கொண்டிருந்த இருவா், விபத்தில் சிக்காமல் உயிா் தப்பியுள்ளனா். இருந்தபோதும், இந்த தீ விபத்தில் 40-க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசமாகின. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.
13 தீயணைப்பு வாகனங்களுடன், 80 தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடைகள் அனைத்தும் அருகருகே அமைந்திருப்பதால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
புவனேசுவரம் மாநகராட்சி மேயா் சுலோசனா தாஸ், ஆணையா் சஞ்சல் ராணா ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறுகையில், ‘தீ விபத்தில் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அரசு தரப்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தியது மற்றும் கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பும் தீ வேகமாகப் பரவியதற்கு முக்கிய காரணங்களாகத் தெரியவந்துள்ளது. எனவே, சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.
