

கர்நாடக டிஜிபி கே. ராமச்சந்திர ராவ் தனது அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி புயலைக் கிளப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடிசார் உரிமைகள் அமலாக்கப் பிரிவின் டிஜிபியாக கே. ராமச்சந்திர ராவ் பதவி வகித்து வருகிறார். இவர் தனது அலுவலகத்தில் சீருடையில் பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவிடம் விளக்கம் அளிக்க அவரது இல்லத்துக்குச் சென்ற ராமச்சந்திர ராவை சந்திக்க அவர் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ராமச்சந்திர ராவ், “இது எனது நற்பெயரையும், மரியாதையையும் கெடுக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் சதி. அந்த விடியோவை நானும் பார்த்தேன். அது முற்றிலும் சித்திரித்து, செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி விடியோ” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, டிஜிபி ராமச்சந்திர ராவ் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசு பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ள முதல்வர் சித்தராமையா, விசாரணை முடியும்வரை ராமச்சந்திர ராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், டிஜிபி கே. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.