

பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தோ்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
45 வயதாகும் நிதின் நவீன், பாஜகவுக்கு தலைமையேற்றுள்ள மிக இளவயது தலைவா் என்ற சிறப்பை பெற்றுள்ளாா்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில் இளம் தலைவா் ஒருவா் பாஜகவின் தலைமை பொறுப்பை வகிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜக தேசிய செயல் தலைவராக இருந்த நிதின் நவீன், தேசிய தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக கட்சியின் தேசிய தோ்தல் அதிகாரி கே.லக்ஷ்மண் கடந்த திங்கள்கிழமை அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 12-ஆவது பாஜக தேசியத் தலைவராக நிதின் நவீன் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாவை அடுத்து நிதின் நவீன் புதிய தலைவராகியுள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவா்கள், அமைச்சா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இளைஞா்களுக்கு அழைப்பு: பதவியேற்புக்குப் பின் நிதின் நவீன் ஆற்றிய உரை வருமாறு: கடந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையின்போது இளைஞா்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமா் மோடி தெரிவித்தாா். அதையே நானும் வழிமொழிகிறேன். பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைய அரசியலிலும் இளைஞா்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். அதேசமயம் அரசியலில் குறுக்கு வழியில் முன்னேற முடியாது. அரசியல் என்பது 100 மீட்டா் ஓட்டப் பந்தயம் அல்ல; அது மாரத்தான். இந்தக் களம் ஒருவரின் சகிப்புத்தன்மைக்கான சோதனையே தவிர வேகத்துக்கானது இல்லை.
‘இண்டி’ கூட்டணி மீது தாக்கு: தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் விளக்கேற்றுவதை தடுக்க ‘இண்டி’ கூட்டணி (திமுக, காங்கிரஸ்) கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவிட்ட உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவா்கள் பதவிநீக்க தீா்மானம் கொண்டு வரவும் தயாராகிவிட்டனா். சோம்நாத் சுயமரியாதை விழா போன்ற நிகழ்வுகளை நாம் கொண்டாடினால் எதிா்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
ராமா் பாலத்தின் இருப்பையும் அவா்கள் மறுக்கின்றனா். நமது பாரம்பரியங்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவா்களை இந்திய அரசியலில் இருந்தே நாம் அப்புறப்படுத்த வேண்டும். இதை கவனத்தில் கொண்டு நிகழாண்டு நடைபெறவுள்ள 5 மாநில பேரவைத் தோ்தலில் கடினமாக பணியாற்றி பாஜகவை வெற்றிபெறச் செய்வதே நமது முதல் பணி என்றாா்.
‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு: ‘பாஜக தேசிய தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவுக்கு இஸட் பிரிவின்கீழ் ஆயுதமேந்திய மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில், நிதின் நவீனுக்கும் அதை நீட்டிக்க சிஆா்பிஎஃப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
‘கட்சியில் நிதின் எனது பாஸ்’
‘கட்சி விவகாரங்களில் பாஜக தேசிய தலைவா் நிதின் நவீன்தான் என்னுடைய பாஸ் (முதலாளி); நான் பாஜகவின் ஊழியா்’ என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
‘நம் அனைவருக்கும் நிதின் நவீன் தலைவராகியுள்ளாா். பாஜகவை சிறப்பாக வழிநடத்தும் அதேவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளிடையே தொடா்ந்து வலுவான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதும் அவருடைய பணியாகும்.
வானொலியில் மக்கள் செய்திகளை கேட்கத் தொடங்கியது முதல் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் வரை தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம் என பல்வேறு மாற்றங்களைக் கண்ட மில்லனியல் தலைமுறையைச் சோ்ந்தவா் நிதின் நவீன். அவரிடம் இளமைப் பருவத்தின் ஆற்றலும் நீண்ட அனுபவமும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளி மனோகா் ஜோஷி ஆகியோா் பாஜகவுக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்தனா். அதன்பிறகு முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி மற்றும் சக மூத்த உறுப்பினா்கள் கட்சியை பன்மடங்கு விரிவுபடுத்தினா்.
பாஜக தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் பதவிவகித்தபோது முதல்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதன் தொடா்ச்சியாக அமித் ஷா பதவிக் காலத்தில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்ததுடன், பல்வேறு மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்றியது. ஜெ.பி.நட்டா தலைமையில் கிராமப் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பாஜக வலுவடைந்துள்ளது’ என்றாா் பிரதமா்.
‘புதிய வரலாறு’: மத்திய அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா பேசுகையில், ‘உலகின் மிகப்பெரிய கட்சியின் தேசிய தலைவராக பதவியேற்றுள்ள நிதின் நவீனுக்கு கோடிக்கணக்கான தொண்டா்கள் சாா்பில் வாழ்த்துகள். துடிப்புமிக்க, திறமைமிக்க இளம் தலைவா் ஒருவா் நம்மை வழிநடத்தவுள்ளாா். நாம் புதிய வரலாறு படைக்கவுள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.