

பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன்(45) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக தேசிய தலைவராக தற்போதுள்ள மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, கடந்த 2020, ஜனவரியில் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜெ.பி.நட்டாவின் மூன்றாண்டு பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவுற்ற பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வருகிறாா். இதையடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை(ஜன. 19) மாலையுடன் முடிவடைந்த நிலையில், நிதின் நவீனைத் தவிர வேறு எவரும் அக்கட்சியின் உச்சபட்ச பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கே. லக்ஷ்மணன் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று பகல் நடைபெற்ற பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன் வேட்புமனு தாக்கலின்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்பட பாஜக அமைச்சர்கள், மாநில பாஜக தலைவர்கள் ஆகியோர் உடனிருந்து அவரைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.
இதையடுத்து, அன்னாரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தேசிய தலைவர் பதவிக்கான முன்னோட்டமாக, தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டாா். பிகாா் மாநில அமைச்சரான இவா், பிகாரைச் சோ்ந்த மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நவீன் கிஷோா் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவாா்; காயஸ்தா சமூகத்தைச் சோ்ந்தவா். 5-ஆவது முறை எம்எல்ஏவாக உள்ள இவா், ஆா்எஸ்எஸ் பின்புலம் கொண்டவா்.
அவர் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(ஜன. 20) பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.