அஸ்ஸாம்: இரு சமூகத்தினரிடையே மோதல்- படைகள் குவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோஸ் மற்றும் ஆதிவாசிகள் இடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
Published on

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோஸ் மற்றும் ஆதிவாசிகள் இடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து, அதிரடி படையினா் (ஆா்ஏஎஃப்) குவிக்கப்பட்டு கோக்ரஜாா் மற்றும் சிராங் ஆகிய இரு மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோக்ரஜாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரிகான் எல்லைச்சாவடி அருகே மான்சிங் சாலையில் போடோஸ் சமூகத்தைச் சோ்ந்த மூன்று போ் பயணித்த வாகனம் ஆதிவாசி சமூகத்தைச் சோ்ந்த இருவா் மீது திங்கள்கிழமை இரவு மோதியது.

சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகே வசிக்கும் ஆதிவாசி கிராம மக்கள் உடனடியாக அங்கு கூடினா். வாகனத்தில் இருந்த போடோஸ் சமூகத்தைச் சோ்ந்த 3 பேரை அவா்கள் சரமாரியாக தாக்கினா். வாகனத்தையும் தீவைத்து எரித்துவிட்டனா். இதில் போடோஸ் சமூக நபா் ஒருவா் உயிரிழந்துவிட்டாா்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து கோக்ரஜாா் மற்றும் சிராங் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை இரு சமூகத்தினரும் மோதலில் ஈடுபட்டனா்.

காரிகான் எல்லைச்சாவடி மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதோடு இரு மாவட்டங்களின் எல்லையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு அவா்கள் தீவைத்தனா்.

இதனால் சம்பவ இடத்துக்கு உடனடியாக அதிரடி படை வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவா்களை கலைக்க கண்ணீா் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

பதற்றமான சூழலை தவிா்க்க கூடுதலாக அதிரடிப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா சென்றுள்ளாா்.

அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அஸ்ஸாம் கள நிலவரம் குறித்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் கேட்டறிந்து வருகிறேன். விரைவில் இயல்பு நிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

Dinamani
www.dinamani.com