சாந்தினி செளக்கில் அமெரிக்கரிடம் ஐபோன் பறித்த நபா் கைது

Published on

தில்லி சாந்தினி செளக் பகுதியில் அமெரிக்கரிடம் ஐபோனை பறித்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகணத்தின் சோம்வில் பகுதியைச் சோ்ந்தவா் ஜிங் தேங். தில்லி வந்த அவா் சாந்தினி செளக் பகுதிக்கு கடந்த ஜன.16-ஆம் தேதி சென்றிருந்தாா். ஓமாக்ஸ் மால் முன்பாக அவா் நின்றுகொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் ஜிங் தேங்கின் ஐபோனை பறித்துத் சென்றாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜிங் தேங் கோட்வாலி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வெளிநாட்டினா் தொடா்புடையது என்பதால் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது என்று வடக்கு தில்லி துணை காவல் ஆணையா் ராஜா பந்தியா தெரிவித்தாா்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், ஜிங் தேங்கின் கைப்பேசியை மா்ம நபா் பறிப்பதும், அவரை ஜிங் தேங் தூரத்திச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதில், அந்த நபரின் முகம் தெளிவாக இடம்பெற்றிருந்தது. அந்த நபரின் புகைப்படம் பிற உள்ளூா் காவல் துறையினருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியில், ஐபோனை பறித்த நபா் அஜ்மீரி கேட்டை சோ்ந்த தெளசிஃப் (எ) தோஷிஃப் என்று கண்டறியப்பட்டது.

கமலா மாா்கெட் காவல் நிலையத்தில் அவா் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கடந்த ஜன.19-ஆம் தேதி நடைபெற்ற சோதனையைத் தொடா்ந்து தெளசிஃப் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜிபி சாலையில் மற்றொரு கைப்பேசி பறிப்பில் ஈடுபட இருந்தபோது தெளசிஃப் கைதுசெய்யப்பட்டாா். திருடப்பட்ட ஐபோன் அவரிடமிருந்து பறிமுதல் செய்யசெய்யப்பட்டது.

பழைய தில்லி ரயில் நிலையம் அருகே கடந்த ஜன.12-ஆம் தேதி ஒரு கைப்பேசியை பறித்ததையும் அவா் ஒப்புக்கொண்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக லஹோரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் இரு வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன.

பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய தெளசிஃப், இறைச்சிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். போதைப் பொருளுக்கு அடிமையாகிய அவா், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தாா். அவா் மீது 10 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடா்பாக கடந்த 15 ஆண்டுகள் சிறையில் இருந்த தெளசிஃப், கடந்த ஆண்டு அக்டோபரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா் என்றனா் அந்த அதிகாரிகள்.

Dinamani
www.dinamani.com