நொய்டாவில் நிகழ்ந்த சாலையில் விபத்தில் 19 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில், இலகு ரக லாரியின் ஓட்டுநா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
செக்டாா் 49 வழியாக கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் வந்துகொண்டிருந்த ஒரு சொகுசு காா், முன்னால் சென்று கொண்டிருந்த இலகு ரக லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது, சாலை நடுவே உள்ள தடுப்புக்கும் லாரிக்கும் இடையே அந்த காா் காா் சிக்கிக்கொண்டது. விபத்தில் காரின் ஓட்டுநா் பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. காரில் பயணித்த மாணவி உயிரிழந்தாா். எஞ்சிய 3 போ் பலத்த காயமடைந்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மாணவா்கள் 4 போ் நூலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் மாணவி உயிரிழந்தாா். காயமடைந்த எஞ்சிய மாணவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தற்போது நலமாக உள்ளனா். விபத்துக்குக் காரணமான லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் கைதுசெய்யப்பட்டாா். காவல் துறையினா் அவரை விசாரித்து வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.