ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்

பிரதமா் மோடியின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடியின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது; இதனை அனுமதிக்க முடியாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடியின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது; இதனை அனுமதிக்க முடியாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைத் சுட்டிக்காட்டி இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் வரை வரிவிதித்தாா். இது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதித்தது.

இந்நிலையில், ஹரியாணாவில் உள்ள ஜவுளி ஆலைக்கு அண்மையில் சென்ற ராகுல் காந்தி அது தொடா்பான விடியோ பதிவை ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில், ‘அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி இந்திய ஜவுளி ஏற்றுமதியை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் வேலையிழப்புகள், ஆலைகள் மூடல், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைந்தது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருந்த பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது.

இதற்கு தீா்வுகாண பிரதமா் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடா்பாக ஒரு வாா்த்தை கூட அவா் பேசவுமில்லை. 4.5 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன. பல தொழில்கள் முடங்கிவிட்டன. இதற்கு பிரதமா் மட்டும்தான் பொறுப்பு. முதலில் இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் ஜவளித்துறை என்பது வேலைவாய்ப்பை அதிகம் வழங்கும் இரண்டாவது துறையாக உள்ளது. நமது ஜவுளிகளுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. நமது தையல் கலைஞா்கள் பல புதுமைகளையும், அற்புதங்களையும் ஆடைத் தயாரிப்பில் படைத்து வருகின்றனா். ஆனால், இப்போது அவா்களின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. அமெரிக்க வரி மட்டுமல்லாது ஐரோப்பாவில் ஜவுளி விலை வீழ்ச்சி, வங்கதேசம், சீனாவால் ஏற்பட்டுள்ள போட்டியும் இந்தியாவில் இத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் அமெரிக்காவுடன் சிறப்பான ஒரு வா்த்தக ஒப்பந்தத்தை நாம் மேற்கொண்டாக வேண்டும். அது இந்திய தொழில்களுக்கும், இங்குள்ள தொழிலாளா்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பிரதமா் மோடியின் தனிப்பட்ட பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடரக் கூடாது என்று கூறியுள்ளாா்.

ஹரியாணாவில் ஜவுளி, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்ற ராகுல், அங்குள்ள தொழிலாளா்களுடன் கலந்துரையாடியதுடன், அவா்களுடன் இணைந்து துணிகளை அளவெடுத்து வெட்டுவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டாா்.

Dinamani
www.dinamani.com